மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


ஜெயிலர் இமாலய வெற்றியை சுவைத்துள்ள ரஜினிகாந்த  தன் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். தலைவர் 170 படம் பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும், ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


தொடர்ந்து தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைவதாக ஏற்கெனவே தகவல்கள்  வெளியாகின. இந்நிலையில் இன்று காலை இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 


இந்நிலையில், தற்போது மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.  இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் தளத்தில் அன்வர் இப்ராஹிம் பகிர்ந்துள்ளதுடன், ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தும், அவர் திரையுலகில் மென்மேலும் சிறந்து விளங்க பிரார்த்திப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.


 


 






இந்தப் புகைப்படங்கள் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக, ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘ஜெயிலர்’ படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படதை நெல்சன் இயக்கிய நிலையில், அனிருத் இசையமைத்திருந்தார்.


தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ரஜினியின் கேரியரில் இப்படம் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்து 600 கோடிகளை வசூலித்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


இச்சூழலில் இன்று லோகேஷ் உடன் ரஜினி இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும், அனிருத் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் செயல்படுவார் எனவும்,  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஆவது முறையாக சன் பிச்சர்ஸ் உடன் இப்படத்தின் மூலம் ரஜினி இணைவது குறிப்பிடத்தக்கது.