நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் 2 படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ஊரெங்கும் ரஜினி அரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள் பலரையும் கவர்ந்துள்ளது.
ஜெயிலர் 2 படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர் 2”. இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில் குமார், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதேசமயம் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ ரோல்களில் அசத்தியிருந்தனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது.
தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தில் பல இடங்களில் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான லீடை நெல்சன் வைத்திருந்ததால் இப்படம் உருவாகியுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரபோர்த்தி, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், பகவதி பெருமாள், சுஜித் ஷங்கர், கோட்டயம் நசீர், ஜடின் சர்னா, நமோ நாராயணா, அன்னா ராஜன் என மேலும் பல நட்சத்திரங்களோடு நெல்சன் களமிறங்கியிருக்கிறார். நடிகை ஷாம்னா காசிம் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த இரண்டு பாகங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.
ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்
கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கூலி படம் வசூலைப் பெற்றாலும் ரசிகர்களை கவரவில்லை. அதனால் ஜெயிலர் 2 படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் வசூலை அள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 5ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்தை தியேட்டரில் சிறப்பாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
போஸ்டரில் காட்டப்பட்ட அலப்பறைகள்
அந்த வகையில் போஸ்டர், பேனர்கள், கட் அவுட்கள் என தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில், ‘எந்த எமனா இருந்தாலும் எங்க சிவனை தொட முடியாது’, ‘என் இதயத்தில் வாழும் ஈசனே’, ’12 PM..8 CM பார்த்தாச்சு.. என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. அதனால் தான் அகிலமே சொல்லுது தலைவர் நிந்தரம்’, ’பழைய சாதனைகளை உடைக்க..புதிய சாதனைகளைப் படைக்க’, ’பல அரசாங்கத்தை பார்த்த ஆளுடா! தலைவர் வரலாறு எடுத்து பாருடா’ ஆகிய வாசகங்களோடு கூடிய போஸ்டர்கள் ஒட்டி அலப்பறை செய்துள்ளனர்.
