லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். 


 



ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பதாலே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா பற்றி எமோஷனலாக பேசி இருந்தார். அந்தத் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


"லால் என்றால் சிவப்பு. சிவப்பு நிறத்தை வன்முறை, ஆபத்து மட்டுமின்றி புரட்சிக்கும் பயன்படுத்துவார்கள். என்னுடைய மகள் ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் சிவப்பை புரட்சிக்கு பயன்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தை பற்றி ஐஸ்வர்யா என்னிடம் சொல்லும் போது இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என சொன்னாங்க. எனக்கு அவார்ட் வேணாம், ரிவார்டு தான் வேணும் என சொன்னேன். அதற்காக நான் அவார்டுக்கு எதிரானவன் கிடையாது. படத்தின் கதையை கேட்ட பிறகு அந்த கேரக்டரில் வேற யாராவது பெரிய ஸ்டாரை நடிக்க வைக்கலாம் என நான் சொன்னேன். அதற்கு பிறகு தான் இது ரொம்ப சென்சிட்டிவான கதை என்பதால் நானே நடிக்கலாம் என தோணுச்சு. அதனால நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டேன். 



லால் சலாம் கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னார் ஐஸ்வர்யா. அதனால் கொஞ்சம் டைம் எடுத்துச்சு. ரஜினிகாந்தே படத்தை தயாரிக்கலாமே, அவரிடம் இல்லாத பணமா? என பலரும் சொன்னாங்க. 'பாபா' படத்திற்கு பிறகு படம் தயாரிப்பதில் எனக்கு ராசியில்லை என்பதால் நான் அதை நிறுத்திவிட்டேன். 


கடவுள்கிட்ட எனக்கு ஆண் குழந்தை வேணும் என யாராவது சொன்னா, “நீ போ, நீ போ” என அனுப்பி வைப்பார். ஆனா பெண் குழந்தை வேணும் என யாராவது கேட்டா நானே வருகிறேன் என சொல்லி கடவுளே வந்து பிறப்பாங்க. அப்படி தான் என்னுடைய இரண்டு மகள்களும். என்னை பொறுத்தவரையில் ஐஸ்வர்யா என்னுடைய இரண்டாவது தாய்” எனப் பேசினார்.


நடிகர் ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மகள்கள் பற்றி மிகவும் எமோஷனலாக பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் பிப்ரவரி 9ஆம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.