இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. வழக்கமாக ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கூலி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

கூலி புக்கிங்:

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருப்பது இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் ஆகும். சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ள இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. 

நேற்று இரவு கூலி படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இரவு 8 மணிக்குத் தொடங்கியதும் ரஜினி ரசிகர்கள் மின்னல் வேகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்கினர். 

புயல் வேகத்தில் டிக்கெட் முன்பதிவு:

இதனால், பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுத் தீர்த்தது. 14ம் தேதி வெளியாகும் கூலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், வெள்ளி சுதந்திர தின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என 4 நாட்கள் தொடர்ச்சியாக பல திரையரங்குகளில் கூலி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றே கருதப்படுகிறது. 

கேரளாவில் முண்டியடித்த ரசிகர்கள் கூட்டம்:

கேரளாவில் திருச்சூரில் உள்ள ஒரு திரையரங்கில் கூலி படத்திற்கான முன்பதிவு நேற்று நடந்தது. நேரில் வந்து முன்பதிவு செய்யும் ரசிகர்களுக்காக இந்த டிக்கெட் முன்பதிவு நடந்தது. அப்போது, நூற்றுக்கணக்கில் ரஜினி ரசிகர்கள் முண்டியடித்து ஓடி வந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இவர்களுடன் அமீர்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாகர்ஜுனா வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ளார். 

ரூபாய் 1000 கோடி?

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த படம் உருவாகியுள்ளது. 

சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரூபாய் 1000 கோடி வசூலை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தற்போது கூலி படத்தின் வர்த்தகம் அதாவது வெளிநாட்டு உரிமம், ஓடிடி உரிமம் அனைத்தும் சேர்த்து ரூபாய் 500 கோடி அளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.