மாமன்னன் படத்தில் வடிவேலுவை புதிதான ஒரு கோணத்தில் பார்த்தது போல் வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரம் இருக்கும் என்று அப்படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


வேட்டையன்


ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன் , மஞ்சுவாரியர் , ரித்திகா சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


ரஜினி - ஃபகத் ஃபாசில் காம்போ:


வேட்டையன் படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்தாண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ரஜினி படத்தில் அவருக்கு எந்த மாதிரியான ரோல் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் வேட்டையன் படத்தில் தான் ஹ்யூமரான கேரக்டரில் நடித்திருப்பதாக ஃபகத் ஃபாசில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது அவரது கேரக்டரைப் பற்றி இன்னும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவலின்படி வேட்டையன் படத்தில் ரஜினி மற்றும் ஃபகத் ஃபாசிலின் காம்போ ரசிகர்கள் வெடித்து சிரிக்கும் வகையில் கலகலப்பாக இருக்கும் என்றும், மாமன்னன் படத்தில் வடிவேலுவை வித்தியாசமான கேரக்டரில் பார்த்தது மாதிரி இந்தப் படத்தில் புதுவிதமான ஃபகத் ஃபாசிலை ரசிகர்கள் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.


வேட்டையன் ஓப்பனிங் சாங் ரெடி


 நடிகர்கள் தவிர்த்து வேட்டையன் படத்திற்கான எல்லா பாடல்களும் தயாராகி விட்டன. படத்திற்கான ஓப்பனிங் பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும் இந்த மாத இறுதியில் இந்தப் பாடல் காட்சிகள் சென்னை ஸ்டூடியோவில் படம்பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது


தலைவர் 171 டைட்டில் டீசர்






வேட்டையன் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் டீசர் உருவாகிவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தான அதிகாரப் பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் .