தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக உலா வருபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சி வரும் நடிகர் ரஜினிகாந்தை இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார்:
சமீபகாலமாக சில வருடங்களாக சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்திற்கான மோதல் அதிகரித்து வருகிறது. ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தில் விஜய்யை அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ள இணையத்தில் ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல் உருவானது. பின்னர், ரஜினிகாந்தின் காக்கா - கழுகு கதைக்கு பிறகு இந்த மோதல் உக்கிரம் எடுத்தது. விஜய் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று கூறிய பிறகும் இந்த மோதல் அதிகரித்தது.
அஜித் - ரஜினி ரசிகர்கள் மோதல்:
இந்த சூழலில், ரஜினி, விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அஜித்குமாரின் கார் மற்றும் மோட்டார் ரேஸ் தொடர்பான வீடியோ ஒன்றை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். தனியார் ஆங்கில யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், முகப்பு படம் மற்றும் தலைப்பில் சூப்பர்ஸ்டார் அஜித்குமார் என்று இடம்பெற்றுள்ளது.
இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் இதை கொண்டாடி வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் அஜித்தை விமர்சித்து வருகின்றனர். ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்றும், மற்ற யாரும் கிடையாது என்று அஜித்தை விமர்சித்து வருகின்றனர். இதனால், அஜித் ரசிகர்கள் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். சில விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு ஆதரவாக ரஜினியை விமர்சித்து வருகின்றனர். சில விஜய் ரசிகர்கள் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் சண்டை:
சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி - அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே மாறி, மாறி இணையத்தில் தற்போது சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு அரசியலில் இருந்து விலகிய ரஜினிகாந்த் தற்போது திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதனால், ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையே இருந்து வந்த மோதல் தற்போது அதிகரித்து வருகிறது.
விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட நடிகர்களாக ரஜினி மற்றும் அஜித் மட்டுமே உள்ளனர். இவர்கள் இருவரது மார்க்கெட் அளவிற்கு கமலின் படங்கள் வியாபாரம் ஆவதில்லை என்பதால் இவர்களின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் விரைவில் தொடங்க உள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.