இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். வில்லனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக, 2வது ஹீரோவாக நடித்து வந்த ரஜினிகாந்த் 1978ம் ஆண்டு முதல் ஹீரோவாக நடிக்கிறார்.
கூலிக்கு ஏ சான்றிதழ்:
இதுவரை கதாநாயகனாக மட்டும் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரை வாழ்வில் அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவரை 5 படங்களுக்கு மட்டுமே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 6வது படமாக கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் எது? எது? என்பதை கீழே காணலாம்.
1.நெற்றிக் கண்:
1981ம் ஆண்டு ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் நெற்றிக்கண். இந்த படத்தில் சபல எண்ணம் கொண்ட தந்தையாகவும், ஒழுக்கமாக வாழத் துடிக்கும் மகனாகவும் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். தந்தையின் சபல காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவற்றிற்காக இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு பாலச்சந்தர் திரைக்கதை எழுதியுள்ளார்.
2.புதுக்கவிதை :
ரஜினிகாந்த்தின் திரை வாழ்வில் முழுக்க முழுக்க காதல் காவியமாக நடித்த ஒரே திரைப்படம் புதுக்கவிதை. கன்னடத்தில் நான் நின்ன மரேயலரே என்ற படத்தின் ரீமேக் இதுவாகும். எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. ஜோதி, சரிதா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தில் கிளைமேக்சில் ரஜினிகாந்த் ரத்தம் வழிய, வழிய மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சிக்காக இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கும்.
3. நான் மகான் அல்ல:
எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் மகான் அல்ல. ரஜினிகாந்துடன் ராதா, எம்.என்.நம்பியார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். சத்ருகன் சின்ஹா நடித்த விஸ்வநாத் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்தான் நான் மகான் அல்ல படம். இந்த படத்திற்கு ஏ சான்றிதழே வழங்கப்பட்டிருந்தது.
4. நான் சிகப்பு மனிதன்:
1985ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் நான் சிகப்பு மனிதன். தனது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமையால் பாதிக்கப்படும் பேராசிரியர் சமூக விரோதிகளை தேடி அழிப்பதே இந்த படத்தின் கதை. ரஜினிகாந்த், பாக்யராஜ், அம்பிகா ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். ராபின்ஹுட் போன்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். வன்முறை காட்சிகள் காரணமாக இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும்.
5. சிவா:
1989ம் ஆண்டு ரஜினிகாந்த் - ரகுவரன் இணைந்து நடித்த திரைப்படம் சிவா. வழக்கமான குடும்ப ஆக்ஷன் ட்ராமாவாக இந்த படம் இருந்தாலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறுத்தையுடன் மோதும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சி, வன்முறை காட்சிக்காக இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும்.
இந்த படங்களுக்கு பிறகு அதாவது, 1989ம் ஆண்டுக்கு பிறகு ரஜினி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்குவது இதுவே முதன்முறை ஆகும். ஏ சான்றிதழ் என்பது ஆபாச காட்சிகளுக்கு மட்டும் வழங்கப்படுவது இல்லை. அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள், திகிலூட்டும் காட்சிகள் போன்றவை இருந்தாலும் வழங்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் படத்தில் சண்டைகள், ரத்தம் நிறைந்த வன்முறை காட்சிகள் அதிகளவு இடம்பெறுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கூலி படத்தில் சத்யராஜ், அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இது முழுக்க முழுக்க வன்முறை கதைக்களத்துடன் நடக்கும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.