சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர்களுக்கென அமைக்கப்படவுள்ளது நடிகர் சங்க கட்டடம். நடிகர்களுக்கான சங்கத்தை 1942 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ஆர் நிறுவினார். அதன் பின்னர் விஜயகாந்த், சரத்குமார் என பல நடிகர்கள் இந்த சங்கத்தில் தலைவர் பதவி வகித்தனர். தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டடத்தில் 70 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. இதில், புதிய திரையரங்குகள், திருமண மண்டபம், நடிகர்களுக்கான பயிற்சி அலுவலகங்கள் என பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட இந்த கட்டுமான பணி, நிதி நெருக்கடி காரணமாக இரண்டு வருடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் இதற்காக நிதி திரட்டும் வகையில் மலேசியா உள்ளிட்ட பல நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
தற்போது தமிழ் திரைப்பட நடிகர் நாசர் தலைமையில் இயங்கி வரும் நடிகர் சங்கத்தில், பல முன்னனி நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். துணைத் தலைவர்களாக நடிகர் கார்த்தியும், பொது செயலாளராக நடிகர் விஷாலும், பதவி வகிக்கின்றனர். இவர்கள் பதவியேற்றவுடன் முதல் வேளையாக நடிகர் சங்க கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தனர். குறிப்பாக, “நடிகர் சங்க கட்டடத்தில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று நடிகர் விஷால் சபதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மே மாதத்தில் நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களான விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்டுமான பணிகளைத் தொடர்ந்து முடிக்க இன்னும் 30 கோடி தேவைப்படுவதால் வங்கிக்கடன் வாங்கலாம் என முடுவு செய்யப்பட்டது.
நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்
இதனிடையே நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்தன. சமீபத்தில், நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் யாரோ கொலை மிரட்டல் விடுத்ததாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகர் சங்க மேளாலர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்திருந்தார். இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் கார்த்தியை பற்றி பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகயுள்ளது.
முன்னனி நடிகர்கள் உதவி
நடிகர் சங்க கட்டடத்தின் வேலைகளை விரைவில் முடிக்க நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்தை நடத்த, நடிகரும் பொருளாளருமான கார்த்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் நடிகர் அஜித்தை சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரை பரிசு மழையில் நனைய வைத்ததால், நடிகர் சங்கத்திற்கு தேவையான இந்த உதவியை கமல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.