கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்க பட்டாளத்தை வைத்திருக்கும் ரஜினியின் முதல் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்த முத்துமணி என்பவர் நேற்று மரணமடைந்தார்.
ரஜினிக்கு முதல் ரசிகர் மன்றம் அமைத்த தீவிர ரசிகர் முத்துமணியின் மறைவால் ரஜினி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மறைந்த ரசிகர் முத்துமணி மதுரையைச் சேர்ந்தவர். ரஜினிக்கு சென்னையில் அல்லது மற்ற நகரங்களில் ரசிகர் மன்றம் தொடங்கும் முன்பே மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத்தை தொடங்கி இருக்கிறார்.
1975-ம் ஆண்டு, ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் படம் வெளியானபோதே, முத்துமணி ரசிகர் மன்றத்தை தொடங்கிவிட்டார். அதனை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக உருவான ரஜினி, சர்வதேச அளவில் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டு வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார்.
தனது முதல் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்த முத்து, ரஜினிக்கு மிகவும் பரிச்சயமானவராக பின்னாளில் மாறிப்போனார். முத்துமணியின் திருமணம் ரஜினி முன்புதான் நடைபெற்றிருக்கிறது. ரசிகர் என்பதையும்தாண்டி குடும்பத்தில் ஒருவராகவே முத்துமணியை ரஜினி பாவித்து வந்திருக்கிறார்.
ரஜினியுடன் தொடர்பில் இருந்தாலும், வாடகை வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துமணி சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டுள்ளார். ஆனால், மீண்டும் இந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்து ரஜினி ரசிகர்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்