நடிகர் ரஜினிகாந்திற்கு அண்மையில் மத்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்றுக்கொள்ள ரஜினி தனது மகள் மற்றும் பேரன்களுடன் கோவா புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ரஜினியின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை கெளரவிக்கும் விதமாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினி இந்த விருதை கோவா சென்று பெற்றுக்கொண்டார். விருது பெற்ற பின் ரஜினி தனது திரைப் பயணத்தைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். " இன்று திரும்பி பார்க்கையில் 50 ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை. ஏதோ 10- 15 ஆண்டுகள் போல் 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. நடிப்பையும் சினிமாவையும் நான் அவ்வளவு நேசிக்கிறேன். இன்னும் 100 பிறவிகள் எடுத்தாலும் ரஜினி என்கிற நடிகனாக நான் பிறக்கவே ஆசைப்படுகிறேன். இந்த விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் முக்கியமாக என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என ரஜினி கூறினார்
ரஜினியை சந்தித்த ரசிகர்
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற சென்றபோது ரஜினியை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் சந்தித்து அவரிடம் ஆட்டோகிராப் பெற்றார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் உணர்ச்சிவசமாக பதிவு செய்துள்ளார். ரஜினி சென்ற ஒரே விமானத்தில் பயணித்த அந்த ரசிகர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ரஜினியை வரைந்துள்ளார். எப்படியாவது ரஜினியின் கையெழுத்தை வாங்கிவிட நினைத்தார். ஆனால் விமானத்தில் ரஜினி தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை நெருங்கவில்லை . ஆனா விமான நிலையத்தில் ரஜினி இறங்கிச் சென்றபோது அவரை விரட்டிச் சென்று ரஜினியின் கையெழுத்தை வாங்கியுள்ளார் அந்த ரசிகர். இந்த வீடியோவை அந்த ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது