தமிழ் சினிமாவில் அச்சாணி, அன்பே சங்கீதா,மீனாட்சி குங்குமம் , மனைவி வந்த நேரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் காரைக்குடி நாராயணன். பல படங்களுக்கு கதை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இவரின் அச்சாணி திரைப்படம் மற்றும் கதை , வசனம் எழுதிய திக்கற்ற பார்வதி திரைப்படம் விருதுகளை பெற்ற திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரஜினிகாந்த் குறித்த சுவாரஸ்யங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதில் “ இயக்குநர் பீம்சிங் சார்க்கிட்ட நான் கத்துக்கிட்டது, அவருடைய எடிட்டிங் டெக்னிக். எந்த பிழையாக இருந்தாலும் அதை பேச் வொர்கில் சரி செய்துவிடலாம் என்பதுதான்.
அச்சாணி திரைப்படத்திற்கு பிறகு திரைக்கதை எழுத வேண்டும் என என்னை அழைத்திருந்தார் பீம்சிங் சார். நான் சென்ற பொழுது அவரது உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்திருந்தார். அப்போது என்னிடம் கேட்டார். என்ன உங்களின் டிராமா நன்றாக இருக்கும் என்கிறார்கள் , படமாக பண்ணலாமா ? என்றார்.சி.ஐ.டி சகுந்தாலாவை வைத்து நான் எடுத்த டிராமாவை பார்த்தார். படம் எடுக்கிறோம், ஆனால் எனக்கு ஹீரோ யார்? ஹீரோயின் யார் என பரிந்துரை செய்யுங்கள் என்றார். ஹீரோவாக விஜயகுமாரையும் , வில்லனாக சிவாஜி ராவ்னு ஒருத்தர் வந்திருக்காரு சார் அவரை நடிக்க வைக்கலாம் சார் என்றேன். சரி அவரை வந்து பார்க்க சொல் என்றார். ரஜினி வந்ததும் அவரின் காலை தொட்டு வணங்கி , உங்களின் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்றார். உடனே இவரின் நாடகங்களை எல்லாம் பார்த்திருக்கிறீர்களா என கேட்டார் பீம்சிங். இந்த நாடகம் தவிர சில நாடகங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன் சார் என்றார் ரஜினி.
சரி நீங்க நல்லா தமிழ் பேசுவீங்களா? ஏன்னா படத்தில் சில பாரதியார் வசனங்கள் இருக்கிறது அதுதான் என்றார் பீம்சிங். நான் பேசுவேன் சார், ஸ்கிரிப்ட் மட்டும் முதல்நாள் கொடுத்துடுங்க என்றார் ரஜினி.ஸ்ரீபிரியா நாயகி , விஜயகுமார் ஹீரோ , ரஜினி இரண்டாவது ஹீரோ ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் ஸ்ரீபிரியா கால் ஷீட் பிரச்சனை. எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அப்போதுதான் மஞ்சுளா , நான் எம்.ஜி.ஆர் , சிவாஜி இல்லாமல் மற்ற நடிகர்களுடனும் நடிக்க தயார் என அறிக்கை விட்டிருந்தார். அவரிடம் பேசினோம், அவர் ஆடைகள் மற்றும் மேக்கப்பில் மட்டும் காம்ப்ரமைஸ் செய்யமாட்டேன் என்ற கண்டீஷனுடன் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பிறகு முதல் ஷார்ட் எடுத்தாச்சு.
அதன் பிறகு பீம்சிங் சாரின் உடல்நிலை மோசமாயிடுச்சு. படத்தை இடையில் நிறுத்த முடியாது என்பதால் கிருஷ்ண மூர்த்தியை வைத்து மீதமுள்ள படத்தை எடுக்க சொன்னார் பீம்சிங் சார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி படத்தின் சில காட்சிகளை நீக்க சொல்லி, பீம் சிங் சார் வைக்க சொல்லி இப்படியாக ஷூட்டிங்கை எடுத்தோம் . படத்தின் 3 நாள் ஷெடியூல் உள்ள நிலையில் பீம் சிங் சார் இறந்துவிட்டார். அதன் பிறகு கிடப்பில் போடப்பட்ட படத்தை நானே இயக்கும் நிலை. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் உச்சநட்சத்திரமாக மாறிவிட்டார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி , மீண்டும் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு ஷூட் செய்தோம். தயாரிப்பாளர் சிவசுப்பிரமணியம் ரஜினிக்கு முதல்நாள் செய்த சத்தியத்தை மீறி , அவரது காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
ரஜினிக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காததால் , ரஜினி கோபத்தில் நடந்தே வீட்டிற்கு சென்றுவிட்டார். தயாரிப்பாளரிடம் அவர் பெரிய நடிகர் , இப்படியெல்லாம் செய்யக்கூடாது என பேச்சுவார்த்தை நடத்தினோம் ஆனாலும் பயனில்லை. இதனை ரஜினிகாந்த் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். அது என்னுடைய படம்தான் என்பதில் எனக்கு வருத்தம் “ என தெரிவித்துள்ளார்.