உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவரது கால்களை தொட்டுக் கும்பிட்டு வணங்கினார். இது தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு முன் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் கிளம்பிய நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றபின்னர் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசத்திற்கும் பயணத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் என வரிசையாக பாஜக பிரமுகர்களை சந்தித்த ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார்.
இதையடுத்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இமயமலை பயணத்தை முடித்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஒரு சந்நியாசி ஆகட்டும், யோகி ஆகட்டும் அவர்கள் வயதில் சிறியவர்கள் என்றாலும் அவர்கள் காலில் விழுவது எனது பழக்கம் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்டபோது, "ரஜினிகாந்த் யார் காலில் விழ வேண்டும் என்பது ரஜினிகாந்தின் விருப்பம். நானுமே என்னைவிட வயதில் சிறியவர்கள் ஆனாலும், அவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக இருந்தால் அவர்களை வணங்க நினைப்பேன். ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் அடையாளம். 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரம் அவரை தமிழ்நாட்டின் அடையாளமாகக் கருதவேண்டும். ரஜினிகாந்திற்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் நட்பு இருந்து இருக்கலாம். அந்த நட்பின் பால் அவர் காலில் விழுந்து இருக்கலாம்” எனவும் சீமான் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி நடிகரும் டேன்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கதில் சீமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், இந்த வீடியோவை நான் இப்போதுதான் பார்க்கிறேன். சீமான் அண்ணாவுக்கு எனது நன்றிகள். நீங்கள் தலைவருக்கு எதிராக எப்போது பேசினாலும் நான் உங்களுக்கு எதிரானவன்தான். ஆனால் நீங்கள் தற்போது அன்புடன் பேசியிருப்பதால் நான் விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன். மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள் என ராகவா லாரன்ஸ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.