‘சேவையே கடவுள்’ என்ற அறக்கட்டளை முன்னெடுக்கும் ‘மாற்றம்’ என்ற பயணத்தின் தொடக்க விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ராகவா லாரன்ஸின் சமூக அக்கறையை பாராட்டி பேசியுள்ளார். 


திரைப்பட நடன இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ‘சேவையே கடவுள்’ எனும் அறக்கட்டளை அமைப்பின் பெயரில் ’மாற்றம்’ செயல்பாடுகள் இன்று முதல் (01.05.2024) தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு மூலம் பல்வேறு மக்களுக்கு உதவிகள் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொண்டு நிறுவனத்தில் எஸ்.ஜே.சூர்யா, செஃப் வினோத்,அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்து சமூக சேவை செய்ய இருக்கின்றனர்.


இந்த முன்னெப்பின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸின் முன்னெடுப்புகள் குறித்து பாராட்டினார். அவர் பேசுகையில்,” லாரன்ஸ் மாஸ்டரை பொறுத்தவரை ஒரு தாயின் வளர்ப்பில் பல போராட்டங்களை தாண்டி இந்தளவு வளர்ந்து வந்திருக்கிறார். இத்தனை தடைகளை தாண்டி வளர்ந்து, வந்த பிறகு,  எல்லோருக்கும் உதவனும் என்ற எண்ணம் வருவது  மிகப்பெரியது. இவர் 25 வருடங்களாக செய்து வருகிறார். ஊனமுற்ற குழந்தைகள் மீது உங்களுக்கு ஏன்  இத்தனை அன்பு என்று கேட்டேன், அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சொன்னார், அவர் அம்மா செய்த ஒரு  நிகழ்வைப் பற்றி சொன்னார். அதைக்கேட்டபோது தான் புரிந்தது. அவர் ஒரு லெஜெண்ட். 


ஒரு படம் முடிந்தால் பெரிதாக அந்த நடிகர்களோடு உறவு இருக்காது, பார்க்கும் போது பேசிக்கொள்வோம் அவ்வளவு தான், ஆனால்  இவருடன் இணைந்து பயணிக்கிறேன் என்றால் அவரின் அன்புதான் காரணம். அவரின் சொந்த  முயற்சியில் சொந்தப் பணத்தில் தான் உதவிகள்  செய்து கொண்டிருக்கிறார். உதவி செய்ய வருபவர்களை கூட பணம் வாங்காமல்  நீங்களே இவர்களுக்கு செய்யுங்கள் என்கிறார். அவர் வளர்த்த குழந்தைகள் இன்று வளர்ந்து பலருக்கு உதவி செய்கிறார்கள். இது பாரட்டுதலுக்குரிய ஒன்று. அவர் என்னை பல கோவில்களுக்கு அழைத்து செல்வார். என்னுள்ளேயே பல மாற்றங்களை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்த மாற்றத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் என்பதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர் தொண்டு நிறுவனத்திற்கு  முதல் கட்டமாக 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.