ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரண்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இயக்கியிருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக ராகவா லாரண்ஸ் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில் 75 களில் திரைப்படம் கல்லூரியில் பிரபல இயக்குநர் சத்யஜித் ரே வின் மாணவனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவும் அதைவிட அழுத்தமான ஒரு கதைக்களத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கொண்டிருக்கிறது என்பதால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியான பேட்ட படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மகான் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகின. தன்னுடைய முதல் படமான பீட்சா படம் ரிலீஸானபோது தனக்கு இருந்த அதே பதற்றம் தனக்கு இந்த முறையும் இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.


வெற்றித் திரையரங்கத்தில் படக்குழு


 ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ரசிகர்களுடன் பார்த்து அவர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள  நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா, சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் வெற்றித் திரையரங்கத்திற்கு சென்றுள்ளார்கள். முதல் பாடி முடிந்தவுடம் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள படக்குழு படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


ராகவா லாரண்ஸ்


ராகவா லாரண்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது “இந்தப் படம் எங்களில் ஒராண்டுகால உழைப்பு. ரசிகர்களின் ஆரவாரத்தையும் கைத்தட்டல்களை பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் எஸ் ஜே சூர்யாவும் வந்த அனைத்துக் காட்சிகளையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். குறிப்பாக இன்டர்வல் ப்ளாக் நான் ரொம்ப ரசித்துப் பார்த்தேன். இந்தப் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஸ்டோன் பெஞ்சு ப்ரோடக்‌ஷன்ஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ராகவா லாரண்ஸ் கூறியுள்ளார். தொடர்ச்சியாக ஹாரர் படங்களில் மட்டுமே நடித்த ராகவா லாரண்ஸ் நடித்து சமீபத்தில் வெளியாகிய சந்திரமுகி 2 படம் தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் அவரது இமேஜை மாற்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


எஸ்.ஜே சூரியா


எஸ்.ஜே சூரியா பேசும்போது “ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் நாங்கள் எந்த எந்த காட்சிகள் எல்லாம் மக்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்தோமோ அந்த காட்சிகள் எல்லாம் சிறப்பாக வரவேற்பைப் பெற்று இருக்கின்றன. இண்டர்வலில் ரசிகர்களின் கைதட்டல்களையும் சந்தோஷத்தையும் பகிர்ந்துக்கும் போது அவர்கள் படத்தை எவ்வளவு ரசித்தார்கள் என்று தெரிய வருகிறது “ என்று கூறினார்