சந்திரமுகி 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் லோகேஷ் கனகராஜின் கதையில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.


ராகவா லாரன்ஸ்


 நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து முடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள திரைப்படம் சந்திரமுகி 2. கங்கனா ரனாவத்  இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க, வடிவேலு மற்றும் பலர்  நடித்துள்ளார்கள். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசுவே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.


ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. வருகின்ற செப்டம்பர்  19ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சந்திரமுகி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தனது அடுத்தப் படத்தின் அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.


லோகேஷின் கதையில் ராகவா லாரன்ஸ்


மேயாத மான் , குலுகுலு படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்தப் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத இருப்பதாகவும், மேலும் இந்தப் படத்தை தனது சொந்த தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


அடுத்த மாதம் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சனா முதல் இரண்டு மற்றும் மூன்று பாகங்கள் மற்றும் சிவலிங்கா, தற்போது சந்திரமுகி என தொடர்ந்து ஹாரர் படங்களில் மட்டுமே ராகவா லாரன்ஸை பார்த்து வந்த ரசிகர்கள், தற்போது அவரை புதிய ஒரு தோற்றத்தில் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.






லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் லியோ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு நிகழ்ச்சி அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.