தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சியில் சாதி பெருமை பற்றி நடிகர் பார்த்திபன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படியான நிலையில் அவர் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். 

Continues below advertisement

உஸ்தாத் பகத் சிங் பட நிகழ்ச்சி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் ஷங்கர் இயக்கியுள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்த படத்தில் ஹீரோவாக பவன் கல்யாண் நடித்துள்ளார். ராஷி கண்ணா மற்றும் ஸ்ரீலீலா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பார்த்திபன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண் ஹரிஹர வீரமல்லு, ஓஜி ஆகிய இரு படங்களிலும் நடிக்க அப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இப்படியான நிலையில் உஸ்தாத் பகத் சிங் படமும் ரசிகர்களிடம் பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் உஸ்தாத் பக்த் சிங் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

Continues below advertisement

பார்த்திபன் சர்ச்சை பேச்சு

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், “நான் பார்த்திபன். நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி சென்னையில் வாழ்ந்ததால் தெலுங்கில் சரளமாக பேச வராது. ஆனால் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்த பிறகு உங்களிடம் முழுக்க தெலுங்கில் பேச வேண்டும் என நினைத்தேன்” என பேசினார். பார்த்திபனின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தமிழ்நாட்டில் சாதி புரட்சி பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் எல்லாம் பார்டர் தாண்டி விட்டால் சாதி பெருமை பேசுகிறார்கள் என இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

சமூக வலைத்தளங்கள் முழுக்க பார்த்திபன் பேச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ஒரு வித்தியாசமான படைப்புகளை வழங்குபவர் என்ற வகையில் உங்கள் மீது ஒரு மதிப்பு இருந்தது. அதனை கெடுத்து விட்டீர்கள் என சகட்டுமேனிக்கு கமெண்டுகளை வெளியிட்டனர். 

இந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் பார்த்திபன் தான் பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “என் நினைவு தவறும்வரை உன் நினைவும் தவறாது- தமிழ்!” என்ற கேப்ஷன் இடம் பெற்றுள்ளது. மேலும் வீடியோவில்,  நான் தமிழில் 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன். 15 முதல் 20 படங்கள் வரை இயக்கியுள்ளேன், தயாரித்துள்ளேன். சில தேசிய விருதுகளும் வாங்கியுள்ளேன். இந்த மேடையில் நான் தமிழ் சினிமாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் தமிழ் சினிமாத்துறை தான் என்னை உங்களிடம் (தெலுங்கு சினிமா) அறிமுகப்படுத்தியது எனவும் கூறியுள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.