கன்னடத் திரையுலகின் பிரபல நடிகை ரச்சிதா ராம், கர்நாடக மாநிலம் துமகூருவில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்ற நபர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் ரச்சிதா ராம் மேடையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து வந்த நபர் ஒருவர் அவருக்கு அருகில் சென்று தோளில் கை வைத்ததுடன், செல்ஃபி எடுப்பதற்காக அவரைத் தனது பக்கம் இழுத்துள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அந்த நபரைப் பிடித்தனர்.
தசரா கொண்டாட்டத்தில் ரச்சிதா ராம்
கர்நாடகாவின் துமகூரு நகரில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் அக்டோபர் 19ஆம் தேதி திங்கட்கிழமை இரவு தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகை ரச்சிதா ராம் வந்திருந்தார். அவருடன் துமகூரு மாவட்ட ஆட்சியர் சுபா கல்யாண் மற்றும் மாவட்டப் பஞ்சாயத்து தலைமைச் செயல் அதிகாரி அஷ்விஜா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகர்
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரச்சிதா ராம், மாவட்ட ஆட்சியர் சுபா கல்யாண் மற்றும் மாவட்டப் பஞ்சாயத்து தலைமைச் செயல் அதிகாரி அஷ்விஜா ஆகியோருடன் இணைந்து ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து திடீரென வந்த நபர் ஒருவர் நடிகையின் அருகில் சென்றார். தனது கையில் இருந்த செல்போனைப் பயன்படுத்தி அவருடன் புகைப்படம் எடுக்க முயன்ற அவர், ரச்சிதா ராமின் தோளில் கையை வைத்தார். தொடர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது நடிகையைத் தனது பக்கம் இழுத்தார்.
எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டனர். நடிகையின் அருகில் சென்ற அந்த நபரைப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியின்போது நடைபெற்ற இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. காவல்துறையினர் தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நபர் நடிகையிடமிருந்து பிரிக்கப்பட்டார்.
ரச்சிதா ராம் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2013ஆம் ஆண்டு வெளியான ‘புல்புல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரன்னா’, ‘சக்ரவியூஹா’, ‘புஷ்பக விமானா’, ‘அயோக்யா’, ‘கிராந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
