இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரியாமணி, ப்ரித்விராஜ், பிரபு ஆகியோர் நடித்து ராவணன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்திற்குப் பின் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்தார் ஐஸ்வர்யா ராய்.


ராமாயணத்தின் தழுவல்


இந்திய புராணக் கதையான ராமாயணத்தில் வரும் ராவணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ராவணன். ‘வீரய்யா’ என்கிற கதாநாயகன் காவல்துறை தனது தங்கையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றதற்கு பழிதீர்க்க, காவலர் தேவ் பிரகாஷ் (ப்ரித்விராஜ்) மனைவியான ராகினியை (ஐஷ்வர்யா ராய்) கடத்தி அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். தொடக்கத்தில் வீரய்யாவை வெறுக்கும் ராகினி அவனது கதைகளை தெரிந்துகொண்ட பின் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்கிறார்.


 நவீனகாலத்தில் புராணங்கள்


அண்மையில் ராமாயணத்தை மையமாகக் கொண்டு வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் பழைய ராமாயணக் கதையை எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே மறு ஆக்கம் செய்யப்பட்டது. ஒரு வரலாற்றுக் கதையை மறு ஆக்கம் செய்யும்போது அந்தக் கதையை அப்படியே எடுப்பதற்கு பதிலாக, நவீன காலத்தில் அந்தக் கதையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். மறுபடியும் மறுபடியும் ஒரே கதையைத் வேறு வேறு ஊடகங்களில் சொல்ல வேண்டும் என்றால் அதனால் என்ன பயன்? அந்த வகையில் ராவணன் திரைப்படத்தில் ராமாயணத்தை மணிரத்னம் தன் பார்வையில் மறுஆக்கம் செய்தது பாராட்டுக்குரியது.


ராவணன காவியம்


அதே கதை தான். ராவணனின் மனைவி சீதையைக் கடத்திச் செல்கிறார் ராவணன். சீதையைக் கண்டுபிடிக்க ராமனுக்கு உதவி செய்கிறார் அனுமன். ராவணனின் தங்கை சூர்ப்பநகையைக் கொல்கிறார் லட்சுமணன். கடைசியில் ராவணன் கொல்லப்படுகிறார். ஆனால் ஒரு சின்ன மாற்றம். தர்மத்தைக் காக்கும் ஒருவராக புராணக் கதையில் சொல்லப்படும் ராமன் கதாபாத்திரத்திரத்தை வில்லனாகவும், அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனை ஹீரோவாகவும், அவரது வாழ்வியலையும் சித்தரிக்கிறது இந்தப் படம். ஒரு வேளை தன்னை கடத்திச் சென்ற ராவணனை தனது கணவன் ராமனைவிட சிறந்த ஒரு மனிதனாக சீதை உணர்ந்தால், அவன் மீது அவளுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை படமாக்கியிருக்கிறார் மணிரத்னம்.


குறைகள்


மணிரத்னம் கிராமிய நிலத்தில் பெரிதாக ஒட்டாதவர்.  நிலம் சார்ந்த ஒரு கதையை இயக்க முடிவு செய்த மணிரத்னத்தால் தனது அழகியலை, மக்களின் வாழ்க்கையில் பொருத்திக் காட்ட இயலவில்லை. காடுகள், மலைகள் என யாரும் அறியாத ஒரு நிலத்தில் நிகழும் கதை இப்படியான ஒரு செளகரியத்தை அவருக்கு அளிக்கிறது . மலைகளில் காடுகளில் காட்சிகள் கவித்துவத்தை அடைகின்றன ஆனால் நிதர்சனத்தை விட்டு விலகியிருக்கின்றன. ஆனால் புராணக்கதைகளை மறு உருவாக்கம் செய்ததில் ராவணன் ஒரு நல்ல முயற்சி.