தேசிங்கு ராஜா 2

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில்.  கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.  

Continues below advertisement

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். 

மெலடி கிங் வித்யாசாகர் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தை தொடர்ந்து 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் எழிலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை செல்வா கவனித்துள்ளார்.

Continues below advertisement

வரும் ஜூலை 11ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்,கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் ஆர்,வி. உதயகுமார் மற்றும் செயலாளர் இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது

“இன்றுவரை குழந்தைகள் மத்தியில் கூட நான் தெரிவதற்கு காரணம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் காமெடிதான். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காமெடிக்கான லீட் இருந்தது. இந்த படத்தில் அதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்த எழில் சாருக்கு நன்றி. விரைவில் அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கணும். ஒரு காமெடி போராட்டம் நடத்தியே ஆகணும்” என்று பேசினார்.

விஜய் டிவி நடிகர் புகழ் பேசும்போது

“சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். ஆனாலும் உங்களை குக்கு வித் கோமாளியில் பார்த்தது போல சினிமாவில் பார்க்க முடியவில்லை என்று பலரும் கேட்பார்கள். அந்த குறையை இந்த படத்தின் மூலம் எழில் சார் தீர்த்து வைத்துள்ளார். எனக்கு பெண் வேடம் மூலமாகத்தான் பெரிய அளவு பிரபலம் கிடைத்தது. இந்த படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரத்திலே நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சினிமாவில் எப்போது காமெடி பண்ண போகிறீர்கள் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் படமாக இந்த தேசிங்குராஜா 2 இருக்கும்” என்று பேசினார்

விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்

“இயக்குநர் எழில் இந்த டீசரில் என் கதாபாத்திரத்தை காட்டவில்லை. நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார் போல. அப்படி ஒரு முதன்மையான மற்றும் முக்கியமான கதாபாத்திரம் அது. படத்தில் நான் இட்ட வேலையை செய்வதற்காகத்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம். இயக்குநர் எழிலுக்கு திரையுலகில் இது பொன்விழா ஆண்டு என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும். இந்த படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ள ஜனாவை பார்க்கும் போது நடிகர் ராணாவை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நடிகர் (விஜய் டிவி)புகழ் பெண்ணாக பிறந்திருக்கலாம். அந்த அளவுக்கு கலக்கி இருக்கிறார். நானும் செல்வமணியும் படம் இயக்கிய காலங்களில் இருந்த ஹீரோக்களில் வெள்ளந்தியாக பேசக்கூடியவரான் நடிகர் விஜயகாந்துக்கு அடுத்ததாக நான் இப்போது பார்க்க கூடியவர் நடிகர் விமல் தான். எல்லாவற்றையும் அரவணைத்து போகக்கூடிய மனப்பான்மை கொண்ட விமலுக்கு தோல்வி என்பது கிடையாது. இந்த படம் வெற்றி படமாக அமையும்” என்று பேசினார்.