நடிகர் மாதவன், 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், அதில் அவர் நாயகனாக நடிக்கிறார். உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்திய விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விண்வெளி பொறியியலாளருமான நம்பி நாராயணனைப் பற்றி திரைப்படம் இது.
இப்படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திரா, ரஜித் கபூர், ஜெகன், ரான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியில் ஷாருக்கான் பத்திரிகையாளராக கேமியோவில் தோன்றுவார் என்றும், தமிழில் சூர்யா தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது. வெல்லம் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய பிரஜேஷ் சென் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீஜேஷ் ராய் படமாக்கியுள்ளார், எடிட்டிங் பிஜித் பாலா, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் .
அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டிரெய்லர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2022ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஒரு உண்மைக்கதையை திரையில் காணவுள்ள ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளன. இது தொடர்பாக மாதவனுக்கு பல தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த நம்பி நாராயணன்..?
1941-ஆம் ஆண்டு நெல்லை, வள்ளியூர் அருகே பிறந்தவர் நம்பி நாராயணன். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்தார். பின்னர் இஸ்ரோவில் 1966-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால் நம்பியின் ஆராய்ச்சி நேர் எதிராக இருந்தது. வாயுவை திரவமாக்கவும், அதனை எரிபொருளாக்கவும் ஆய்வு செய்தார். கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் மூலம் 1970ல் திரவ உந்து மோட்டாரை உருவாக்கினார். அதன்பின்னரே அவர் வாழ்வில் புயல் வீசியது. இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக நம்பி மீது புகார் எழுந்தது. மாலத்தீவில் இருந்து இந்தியாவில் தங்கியிருந்த சில பெண்களை கேரள போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவின் சில பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ச்சியாளர் ஒருவர் உதவியுடன் வெளிநாடுகளுக்கு விற்பதாக அப்பெண்கள் ஒப்புக்கொண்டனர். அப்போது நம்பியின் பெயரும் அடிபட்டது. ஒரு பெண்ணின் அழகில் மயங்கிய நம்பி நாட்டுக்கு எதிராக நடந்துகொண்டார் என குற்றச்சாட்டு காட்டுதீயாய் பரவியது. ஆனால் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட நம்பியோ, தான் செய்த தவறு என்னவென்று கேட்டுள்ளார். குற்றச்சாட்டே புரியவில்லை என தெரிவித்துள்ளார். அதன் பிறகே தொடங்கியது அவரின் சட்டப்போராட்டம். இல்லை என கூறிய நம்பி அதனை நிரூபிக்க நீதிமன்றப் படியேறினார். இதனையடுத்து புகார் தெரிவித்து 4 வருடங்களுக்கு பிறகு நம்பி நிரபராதி என தெரிவித்தது உச்ச நீதிமன்றம். பின்னர் தன்னை குற்றவழக்கில் சிக்கிய கேரள அரசு மீது வழக்குதொடர்ந்தார் நம்பி. இழப்பீடு கோரிக்கை விடுத்தார். அதன்படி ரூ.1 கோடியை இழப்பீடாகவும் கொடுத்தது கேரளா.