இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும்பியார் பிரேமா கல்யாணம்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் Netflix தளத்தில் வெளியாகிறது.

Continues below advertisement

இப்படத்தில் இளனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியுடன், கணவனும் மனைவியின் வீட்டிலேயே சென்று வசிக்கும் சூழலை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் குடும்ப உறவுகள், காதல், எதிர்பார்ப்புகள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை புதிய கோணத்தில் இப்படம் சொல்ல முயற்சித்துள்ளது.

Continues below advertisement

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநராக இருந்த ஒருவர் நடிகராக மாறுவதற்கு தைரியம் தேவை என்றும், அந்த தைரியம் இளனிடம் இருப்பதாகவும் பாராட்டினார். டிரெய்லரில் தன்னை சிரிக்க வைத்த பல காட்சிகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகை ராதிகா, இன்றைய இளைஞர்களின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த மாறிவரும் பார்வைகளை இப்படம் பேசுவதாக கூறினார். இது வழக்கமான குடும்பப் படம் அல்ல என்றும், சமூக மாற்றங்களை நேர்மையாக கையாளும் திரைப்படம் என்றும் தெரிவித்தார்.

நடிகர் செந்தில், இளனின் கதாபாத்திரம் தனக்கு இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜை நினைவுபடுத்துவதாக கூறினார். இளங்கோ குமரவேல், படத்தில் இடம்பெறும் மாமனார் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பப்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.

யோகிபாபு, ‘ஸ்டார்படத்திலிருந்தே இளனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பேச்சு இருந்ததாகவும், தற்போது அந்த வாய்ப்பு நிறைவேறியிருப்பதாகவும் கூறினார். மேலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து மற்றொரு படத்திலும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

சான்வி மேக்னா, இயக்குநராகவும் நடிகராகவும் இளன் ஒரே நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டினார். இயக்குநர் இளன், இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், இப்படத்தின்அட்ராசிட்டிபாடல் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இளன் தெரிவித்தார். படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், முழு ஆல்பத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தை அதிகமாக விளக்காமல், ரசிகர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களுடன் கதையை தொடர்புபடுத்தி ரசிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் இளன் கூறினார். இந்த புதிய முயற்சி இளனுக்கு நடிகராகவும் இயக்குநராகவும் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதை வெளியீட்டுக்குப் பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தை முழுமையாக பார்த்துவிட்டதாகவும், இது சிறந்த என்டர்டெயினராகவும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். காதல், திருமணம், குடும்பம் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டுள்ள இப்படம் ஆகஸ்ட் 21 முதல் Netflix தளத்தில் வெளியாகிறது.