புஷ்பா 2 


அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் ஒருபக்கம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தாலும் இன்னொரு பக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா 2 படத்தின் சிறப்புத் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து தெலங்கானா போலீஸ் அல்லு அர்ஜூனை கைது செய்தது. அல்லு அர்ஜூனை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு இரவு சிறையில் கழித்தப்பின் அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளிவந்தார். 


உயிரிழந்த பெண் குறித்து அல்லு அர்ஜூன் வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி வழங்கிய அல்லு அர்ஜூன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் வரும் ரேவதியின் மகன் சாய் தேஜின் மருத்துவ செலவுகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார். 


சினிமாவை விட்டு விலகுவது குறித்து புஷ்பா இயக்குநர்


புஷ்பா 2 திரைப்படம் இந்தியளவில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றிகொண்டாட்டத்திற்கு மத்தியில் இப்படியான நிகழ்வு படக்குழு அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இப்படத்தின் இயக்குநர் சுகுமார் அல்லு அர்ஜூன் சர்ச்சை குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 


சமீபத்தில் ஹைதராபாதில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமாரிடம் ஒரு விஷயத்தை நீங்கள் கைவிட விரும்பினால் அது என்ன என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் சுகுமார் " சினிமாதான்" என பதிலளித்துள்ளது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுகுமார் அருகில் இருந்த நடிகர் ராம் சரன் உடனே அவரிடம் இருந்து மைக்கை பறித்து " சுகுமார் சினிமாவில் இருந்து போக கூடாது " என தெரிவித்தார். புஷ்பா 2 படம் தொடர்பாக நடந்த நிகழ்வுகள் காரணமாக சுகுமார் இந்த பதிலை அளித்திருக்கலாம் என்ற சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது