மறைந்த பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் கடைசிப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரது மனைவி பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 






1975ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் புனீத் ராஜ்குமார்  சிறு வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்தவர்களுள் ஒருவர்.  இவரது இயற்பெயர் லோஹித், திரையுலகிற்காக இவரது பெயர் புனீத் ராஜ் குமார் என மாற்றப்பட்டது. இத்தனை பெயர்களை கொண்டிருந்தாலும், இவர் செல்லமாக அழைக்கப்படுவது “அப்பு” என்ற பெயரால்தான். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த புனீத் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே பேரதிர்ச்சியாக அமைந்தது.சொல்லப்போனால் இன்றளவும் பலராலும் நம்ப முடியாததாகவே அப்புவின் மரண செய்தி உள்ளது. 






கடந்தாண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் காலமான புனீத் ராஜ்குமாருக்கு சமீபத்தில் கர்நாடக ரத்னா எனும் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி புனீத் ராஜ்குமாரின் கடைசிப் படமாக கந்தாட குடி படம் வெளியானது. 


மனைவி அஸ்வினி தயாரிப்பில் அமோக வர்ஷா இயக்கியிருந்த கர்நாடகத்தின் வனப்பகுதிகளையும், அதன் அழகையும் காட்சிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தில் அப்புவை காண மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனிடையே அஸ்வினி குமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.






அதில் குழந்தைகள் அதிகமாக கந்தாட குடியை பார்க்க வேண்டும் என்பது புனீத்தின் விருப்பம் என்றும், அதை சாத்தியமாக்கும் வகையில், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் படக்குழுவினருடன் பேசி டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை கர்நாடகா முழுவதும் சிங்கிள் ஸ்கிரீன்களில் படத்தின் டிக்கெட் விலை ரூ. 56, மற்றும் மல்டிபிளக்ஸ்களுக்கு ரூ.112 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.