கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட நடிகர் புனீத் ராஜ்குமாரின் 48-வது பிறந்தநாள் இன்று. வீட்டின் கடைக்குட்டியாக பிறந்த புனீத் ராஜ்குமாரின் இறப்பு அவரது குடும்பத்தை மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகம் மற்றும் திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் பிறந்தநாளான இன்று அவரின் நினைவலைகள் ரசிகர்களின் மனங்களை கணக்கவைக்கிறது.



புனீத் ராஜ்குமார்


 


சத்தமில்லாமல் செய்த சேவை :


ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே தனது பயணத்தை தொடங்கிய புனீத் ராஜ்குமார் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் ஹீரோவாக அறிமுகமானது 2002ம் ஆண்டு வெளியான 'அப்பு' திரைப்படத்தில். ஒரு சிறந்த நடிகர் என்று கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார் உண்மையிலேயே இரு புனிதமான ஆத்மா. எத்தனையோ ஏழை குழந்தைகளின் கல்வி செலவு, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மற்றும் கோசாலை என ஏராளமான சமூக சேவைகளை சத்தமில்லாமல் செய்துள்ளார் என்பது அவரின் மறைவுக்கு பிறகு தான் வெளிவந்துள்ளது. நான் இது செய்தேன் அது செய்தேன் என மார்தட்டிக்கொள்ளும் எத்தனையோ மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு மனிதனா? என அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தவர் புனீத் ராஜ்குமார். 


புனீத் ராஜ்குமார் நினைவிடம் :


இது போன்ற நல்ல குணம் படைத்த நல்லவர்களை எல்லாம்தான் கடவுள் தேர்ந்து எடுத்து தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் என்ற கோபமும் வந்துபோகிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக அவரின் இறுதி சடங்கில் லட்சக்கணக்கான எளிய மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்றும் அவரின் நினைவிடத்தில் மக்கள் கூட்டத்தால் தினந்தோறும் நிரம்பி வழிகிறது. அவர் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் அவரின் இறப்புக்கு பின்னரே வெளியானது. அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இன்று அவர் நமக்கு மத்தியில் இல்லை என்றாலும் அவரின் நினைவுகளும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் மக்கள் நெஞ்சங்களில் இன்றும் என்றும் மலர்ந்துகொண்டேதான் இருக்கும்.