இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம் பிராஜக்ட் கே. பிரபாஸ், கமல்ஹாசன், ராணா டகுபதி, தீபிகா படுகோன் என இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
பிரபாஸின் மற்றொரு மெகா பட்ஜட் படம்
மெகா பட்ஜட் படங்களில் நடிப்பதற்கு பெயர்போனவர் பிரபாஸ். தற்போது தனது அடுத்தப் படமாக பிராஜக்ட் கேவில் நடிக்கத் தயாராகிவிட்டார். தெலுங்கு திரைப்பட இயக்குநர் நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மொத்தம் 600 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாக உள்ளது.
தீபிகா படுகோன் , அமிதாப் பச்சன், திஷா பதானி, ராணா டகுபதி என உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ஸ் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஒருபுறம் இந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்றாலும் மறுபுறம் பிரபாஸின் இந்த போஸ்டர் செயற்கையாக உள்ளதாகவும், ஆதி புருஷ் பட லுக்கை நினைவுபடுத்துவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மீம் பக்கங்களுக்கு இந்த போஸ்டர் கண்டெண்டாக மாறி கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறது.
வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி இணையதளத்தை பரபரப்படையச் செய்தது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் 25 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்ற தகவல் அனைவருக்கு ஷாக் கொடுத்தது.
பிராஜக்ட் கே என்றால் என்ன
இவ்வளவு ஆடம்பரங்கள் செய்து உருவாகும் இந்த பிராஜக்ட் கே என்கிற படம் எதைப் பற்றியது ? படத்தின் உண்மையானப் பெயர்தான் என்ன? இந்தக் கேள்வி ரசிகர்கள் அனைவரது மனதிலும் இருந்து வருகிறது. தற்போதைய நிலைக்கு நமக்குத் தெரிந்தது பிராஜக்ட் கே ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு படமாக இது நிச்சயம் இருக்கும். இது தவிர கூடுதலான தகவலுக்கு நாம் வரும் ஜூலை 21ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
அமேரிக்கா சென்ற படக்குழு
தற்போது பிராஜக்ட் கே படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். இவர்களுடம் நடிகர் கமல்ஹாசனும் அமெரிக்கா சென்றடைந்துள்ளார். ஏதோ பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி!