சினிமா மோகத்தால் தனது சொத்துக்களை எல்லாம் இழந்ததாக தயாரிப்பாளர் துரை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமா ரசிகர்களை நேற்றைய தினம் ஒரு வீடியோ அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் பிதாமகன் பட தயாரிப்பாளர் துரை, நீரிழிவு நோய் காரணமாக தனது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவரது மருத்துவ சிகிச்சை தொடர்பாக உதவும்படியும் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. 


துரையின் நிலையை அறிந்த நடிகர் சூர்யா அவருக்கு 2 லட்ச ரூபாய் பண உதவி அளித்ததாக தகவல் வெளியானது.அதேசமயம் கம்பீரமாக இருந்த துரையின் பழைய போட்டோவும் இணையத்தில் வைரலானது.  இதனிடையே நேர்காணல் ஒன்றில், எனக்கு 5 மாதங்களாக இந்த பிரச்சினை இருக்கிறது. 4 மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்தேன். சின்ன வடுவாக தோன்றிய பிரச்சினை இந்த அளவுக்கு வளர்ந்து என்னால் நடக்க முடியாத அளவுக்கு போய்விட்டது.


நான் பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு ஆகிய 8 படங்களை தயாரித்தேன். எந்த படமும் லாபம் பார்க்கவில்லை. 5 படங்கள் நஷ்டமாகி விட்டது. நான் இப்படி நஷ்டப்பட்டு இருக்கிறேன் என்பதை எந்த நடிகரும் நம்ப மாட்டார்கள். 25 வருஷமா, எஸ்.பி.முத்துராமனிடம் உதவி இயக்குநராக இருந்தேன். ரஜினி நடித்த 25 படங்களில் நான் உதவி, இணை இயக்குநராக பணியாற்றியுள்ளேன்.


ரஜினியுடன் நல்ல நட்பு இருந்தது. என்னோட வேலை எல்லாம் பார்த்துவிட்டு எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளரா பாபா படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் தவிர இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. பாலாவிடம் கடைசியாக ஒரு புதுப்படம் பண்ண ரூ.25 லட்சம் பணம் கொடுத்தேன். வாங்கிட்டு பணம் பற்றி திரும்ப கேட்கும் போது நான் பணம் வாங்கவில்லை என கூறி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி விட்டார். பிதாமகன் படத்தை இந்தியில் எடுப்பது பற்றி பேசும் போது பாலாவிடம் படத்துக்கான அட்வான்ஸ் கொடுத்தேன். 


விஜயகாந்த் படம் கஜேந்திரா படம் பண்ணும் போது சொந்தமாக 6 வீடுகள் வைத்திருந்தேன். ஆனால் படம் சரியாக போகாததால் எல்லாம் என்னை விட்டுச் சென்றது. சினிமா மோகம், கூட இருந்தவர்கள் பேச்சைக் கேட்டு ஒரு படத்தில் விட்டதை அடுத்த படத்தில் எடுத்து விடலாம் என நினைத்து இப்படியான நிலைமையில் இருக்கிறேன் என துரை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.