இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள விக்ரம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் மட்டுமின்றி விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோருடன் கடைசி நேரத்தில் சூர்யாவும் நடித்து அசத்தியிருப்பார்.


இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் விஜய், அஜீத், சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களை ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.




இதற்கு பதிலளித்த எஸ்.ஆர்.பிரபு, “ இவர்கள் இணைந்து நடிப்பதை ஒரு வணிக நோக்காக மட்டுமே அணுகக்கூடாது. கதைசார்ந்த நோக்கத்தில் அணுகினால் மட்டுமே பதில் கிடைக்கும். இவர்கள் இணைந்து நடித்தே ஆக வேண்டும் என்ற கதை வரும் பட்சத்தில் அது நடக்கும். ஆர்.ஆர்.ஆர். மற்றும் விக்ரம் படங்கள் இதற்கு நல்ல முன்னுதாரணம் ஆகும். பலர் இதுபோன்ற யோசிக்க ஆரம்பித்திருக்கலாம். விரைவில் அதற்கான வாய்ப்புகள் வரும்.


கைதி 2ம் பாகத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வரும். கைதியை விட பன்மடங்கு பெரிய படமாக கைதி 2ம் பாகம் இருக்கும். மல்டிவர்ஸ் என்பது புதிதல்ல. மல்டிவர்ஸ் ஏற்கனவே சீரியல்களில் இருந்து வருகிறது. திரைப்படங்களில் இது ஒரு ஆரம்பமாக இருக்கலாம். “ என்றார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்த பழைய விக்ரம் படம், கைதி படம் ஆகியவை கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். படத்தில் இறுதிக்காட்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ரோலக்ஸ் என்ற மிரட்டலான ரவுடி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா மிரட்டியிருப்பார். சுமார் 5 நிமிடங்கள் வரை மட்டும் படத்தில் வந்தாலும் ஒட்டுமொத்த படத்திலும் சூர்யாவின் காட்சிகள் மாஸ் காட்டியிருக்கும்.




மேலும், படத்தில் சூர்யா கைதி படத்தின் நாயகனான டில்லி கார்த்தியை பற்றி பேசுவதும், படத்தில் அவரது குரல் வருவதும் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் ரசிகர்களை விக்ரம் 3 அல்லது கைதி 2ம் பாகத்திற்கு தயாராக இருக்குமாறு ரசிகர்களை அறிவுறுத்தியுள்ளது.


இந்த சூழலில், கைதி படத்தின் தயாரிப்பாளர் விஜய், அஜீத் மற்றும் சூர்யா விரைவில் இணைந்து நடிக்கலாம் என்று கூறியிருப்பது மூலம் அதற்கான கதை உருவாக்கல் பணிகள் நடைபெற்று வருவதாக மறைமுகமாக கூறியுள்ளார். எஸ்.ஆர்.பிரபுவின் பேட்டி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண