திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5.24 மோசடி செய்த புகாரில் கைதானவரிடம் நடத்திய விசாரணையில் ரவீந்தருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இவர் ஏற்கனவே மோசடி புகாரில் சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து புதிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

Continues below advertisement


காதல் திருமணம்


சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்‌ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி ரவீந்தர் சந்திரசேகர் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், பிக்பாஸ் போட்டியாளர், சினிமா விமர்சகர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். பலரும் ரவீந்தரை உடல் ரீதியாக விமர்சிக்க தொடங்கினர். ஆனால்,  அதற்கு ரவீந்தர் சந்திரசேகர் தக்க பதிலடி கொடுத்தார். காதலுக்கு கண்கள் இல்லை என இந்த ஜோடி நிரூபித்தது.


மோசடி புகார்


இந்நிலையில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி  கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.அதில், நகராட்சி திடக்கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, தன்னை திட்டமிட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தைத் திருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் புகார் அளித்திருந்தார். 


ரவீந்தர் கைது


இதனைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தது. அதன் பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்ததை விட வெளியே இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார். நல்லவேளை நான் தப்பித்தேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


மும்பை போலீஸ் சம்மன்


இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் மீண்டும் மோசடி புகாரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக மும்பையை சேர்ந்த அஜய் ஜெகதீஷ் கபூரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் மும்பை போலீஸார் ரவீந்தரை சென்னையில் கைது செய்ய வந்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை காரணமாக கைது செய்யாமல் சம்மன் கொடுத்து சென்றுள்ளது.