சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகிவிட்டது. மேலும், 25ஆம் தேதி மாநாடு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர், “மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். சிம்புவுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது. அவருக்கு நெருக்கடி கொடுக்கவே மாநாடு முடக்கப்பட்டுளது.
மாநாடு படத்தை வெளியிடாவிட்டால் நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் வீட்டு முன் உண்ணாவிரதம இருப்போம்” என்றார். டி. ராஜேந்தரின் இந்தக் குற்றச்சாட்டு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நான் குளோபல் இன்பர்மேட்டிவ் சினிமா நிறுவனத்தை கடந்த 12 வருடங்களாக நடத்தி வருகிறேன், பல வெற்றிப்படங்களை தயாரித்திருக்கிறேன். 2016 ஆம் ஆண்டு சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். ஆதிக் ரவிச்சந்திரன் என்ற இயக்குநர் இயக்கினார்.
அந்தத் திரைப்படத்தில் தொடக்கத்திலிருந்தே சிம்பு சரிவர நடிக்கவில்லை. சொன்ன தேதியில் சரியாக படப்பிடிப்பிற்கு வருவதுமில்லை. படம் 50% எடுத்து முடித்த நிலையில் திடீரென ஒரு நாள் என்னை அழைத்து, இந்தப் படத்தை இத்துடன் முடித்து ரிலீஸ் செய்துவிடலாம். நஷ்டம் வந்தால் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என உறுதியளித்தார்.
அதனடிப்படையில் நானும் அப்படத்தை 23.06.2017 அன்று வெளியிட்டேன், படமும் சரியாக ஓடவில்லை . பெருத்த நஷ்டமடைந்தேன், இதன் மூலம் ஏறத்தாழ 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது, இதில் ரூ.12 கோடி விநியோகஸ்தர்களுக்குத் தர வேண்டியிருந்தது. அதன் பிறகு என்னால் அடுத்த திரைப்படமும் தயாரிக்க முடியவில்லை.
இந்நிலையில் சிம்புவே என்னை போனில் தொடர்பு கொண்டு விரைவில் அடுத்த படத்தை நீங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அவர் தந்த வாக்கின்படி தேதி கூறும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அதன்பிறகு என் தொடர்பில் சிம்பு வரவேயில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு T.ராஜேந்தரர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தர் அளித்த பேட்டி ஒன்றில் அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது என்றும் அப்புகாரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் கூறியுள்ளனர்.
மாநாடு திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தடை போட்டிருப்பதாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், மாமூல் கேட்பதாகவும் கந்துவட்டி கேட்பதாகவும் பல முறையற்ற குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தனர்.
இவை யாவும் பொய்யான குற்றசாட்டுகள். 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தங்களால் தீபாவளிக்கு 'மாநாடு' படம் வர இயலாது என்றும் அப்படி வெளியிடும் பட்சத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே "மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.
ஆனால் சிம்பு தரப்பினர் தவறான தகவல்களை கொடுக்கின்றனர். எந்த கட்ட பஞ்சாயத்தும் நடைபெறவில்லை. தொடக்கத்திலிருந்தே பொய்யான உறுதியளித்து எனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2016ஆம் ஆண்டு மைக்கேல் ராயப்பன் சிம்புவை வைத்து “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்ற படத்தை தயாரித்தார். அப்போது படத்தை பாதியில் முடித்துவிட்டு வெளியிடுமாறும் அப்படி ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் இன்னொரு படம் இலவசமாக நடித்துகொடுப்பதாக சிம்பு உறுதியளித்தார். ஆனால் அவர் சொன்ன்படி நடித்துக்கொடுக்கவில்லை.
சிம்புவை நம்பி அப்படத்தை பாதியில் வெளியிட்டதால் தனக்கு ரூ 15 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்