அஜித் சினிமாவில் நடிப்பதையே ஒரு தண்டனையாக நினைக்கிறார் என தயாரிப்பாளர் கேயார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

ஆர்வம் காட்டாத அஜித்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாட், தல என அன்போடு அழைக்கப்பட்டவர் அஜித்குமார். முன்னணி நட்சத்திரமாக திகழும் அஜித் கடந்த 15 ஆண்டுகளாக பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் படங்களில் நடித்து வருவதாக திரைத்துறையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். படத்தின் வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார் என தொடர்ச்சியாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவருக்கென உள்ள ரசிகர்கள் கூட்டம் வருடம் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என விரும்புகிறது. 

அஜித்தை விளாசிய கேயார்

ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் கேயார், அஜித்குமாரை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில், அஜித் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த குட் பேட் அக்லி படத்தால் ரூ.40 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது சினிமா வட்டாரத்திற்கு மட்டும் தெரியும். மக்களுக்கு தெரியாது. பட தயாரிப்பு செலவு, சில ஏரியாவில் வியாபாரம் ஆகவில்லை என்பதால் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அடிப்படையில் அஜித் ஒரு நல்ல மனுஷன். அவர் தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்கிறார். 

Continues below advertisement

அதேசமயம் சினிமாவைப் பொறுத்தவரை அவர் நினைக்கும் படம், அவர் நினைக்கும் தயாரிப்பாளர், அவர் நினைக்கும் டெக்னீசியன்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என நினைக்கிறார். அஜித் சினிமாவில் நடிப்பதையே ஒரு தண்டனையாக நினைக்கிறார். அவரின் முதல் படமான அமராவதிக்கு நான் தான் விநியோகஸ்தர். அந்த படம் சரியாக ஓடவில்லை. 

அஜித்துக்கு ஒரு வருடம் முன்னாடி விஜய் சினிமாவில் நடிக்க வந்தார். அஜித் தன்னுடைய மார்க்கெட் நிலவரத்தை வைத்து சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை. விஜய் என்ன வாங்குகிறாரோ, அதில் ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றிக்கொண்டே வந்தார். அப்படி இப்போது அஜித் உச்சிக்கு போய்விட்டார். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

அந்த படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஒரு நேர்காணலில் நான் ஒரு நல்ல கதை சொன்னேன், அதை எடுத்திருந்தால் நல்ல வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அஜித் என்னிடம் ஒரு ஆங்கில படம் பார்க்க பரிந்துரை செய்து விடாமுயற்சியாக பண்ண சொன்னார். அது வீண் முயற்சியாக போய்விட்டது. இருந்தாலும் அஜித்துக்கென ஒரு ரசிகர்கள் உள்ளனர். 

அஜித் படத்தின் பூஜை தொடங்கி ப்ரோமோஷன் வரை எதற்கும் வர மாட்டார். அப்படி செய்யாதவர் பின்னாடி ஏன் இவ்வளவு கேவலமாக தயாரிப்பாளர்கள் ஓடுகிறார்கள். கொஞ்சம் சுயமரியாதையோடு இருங்கள். அஜித் தன்னை எது வாழ வைக்கிறதோ அதை நேசிக்க மாட்டார். அதனைத் தவிர மற்ற துறையில் எல்லாம் செய்வார்” என கேயார் கூறியுள்ளார்.