ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் சில்லுனு ஒரு காதல், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, மெஹந்தி சர்க்கஸ், தானா சேர்ந்த கூட்டம், பத்து தல, டெடி  உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா. இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவர். அவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் கார்த்தி மற்றும் சூர்யா நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. படங்களை தயாரிப்பதுடன் கும்கி, அட்டகத்தி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உத்தம வில்லன், ஓ காதல் கண்மணி, 36 வயதினிலே, சூது கவ்வும் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை விநியோகம் செய்தும் உள்ளார். 


 




கே.இ.ஞானவேல் ராஜா இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் தங்க நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பெயரில் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் தினேஷ், அன்சாரி, வீட்டு பணிப்பெண் லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்து இருந்தார் ஞானவேல் ராஜா மனைவி நேஹா. இது குறித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் நகைகள் காணாமல் போன விவகாரம் குறித்து அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். 


கே.இ.ஞானவேல் ராஜா மனைவி நேஹா, நகைகள் காணாமல் போனது குறித்து லட்சுமியிடம் விசாரித்த அடுத்த நாளில் இருந்து அவர் வேலைக்கு வரவில்லை என்றும், போனையும் ஆஃப் செய்து வைத்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு பிறகு தான் மாம்பலம் காவல் நிலையத்தில் ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


 



தற்கொலை முயற்சி:


வீட்டு பணிப்பெண் லட்சுமி தன் மீது திருடி பட்டம் கட்டியதால் மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் லட்சுமியின் குடும்ப உறுப்பினர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது லட்சுமி ஐ சி யூ வில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி மாம்பலம் காவல் நிலையத்தில் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் அவரின் மனைவி நேஹா மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் வீட்டு பணிப்பெண் லட்சுமியின் மகள் திவ்யா. இந்த வழக்கு குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 


சமீபத்தில் கே.இ. ஞானவேல் ராஜா - அமீர் இடையே 'பருத்திவீரன்' படம் சம்பந்தமாக கடும் விவாதங்கள் ஏற்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி பெரும் பேசு பொருளாக மாறியது. மிகவும் எதிர்பார்க்கப்படும் சூர்யாவின் கங்குவா மற்றும் விக்ரமின் தங்கலான் திரைப்படங்களை ஞானவேல் ராஜா தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.