K Rajan: 6 மாதம் முன்பு கே.ராஜன் வீட்டில் நிகழ்ந்த தற்கொலை.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகீர் தகவல்!
சினிமாத்துறையில் கே.ராஜன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்பதை யாரும் நம்பவில்லை. அவர் சினிமாவில் ரூ.20 கோடி வரை பைனான்ஸ் செய்துள்ளார். அதில் 90 சதவிகிதம் வரை திரும்ப வரவில்லை என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் கே.ராஜன் பணம் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க கஷ்டப்பட்டார் என்பது உண்மை என பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். மேலும் அவரது தற்கொலை குறித்த சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ராஜன் சில தினங்களுக்கு முன் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பலரும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசுகையில், அடையாறு கூவம் ஆற்றுப்பாலத்தின் அருகில் காரை நிறுத்தச் சொல்லிய கே.ராஜன், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று வருகிறேன் என சொல்லியுள்ளார். பின்னர் திரும்பி வந்து காரிலும் ஏறியுள்ளார். ஆனால் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை. திரும்பவும் கீழே இறங்கி பாலத்தில் சென்று அங்கிருந்த சுவரில் ஏறி நின்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் சுதாரிப்பதற்குள் கே.ராஜன் குதித்து விட்டார். தீயணைப்பு படையினர் வந்து அவரது உடலை மீட்டு ராயப்பேட்டைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்திடம் கொடுக்கப்பட்டது என நடந்ததை விவரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சினிமாத்துறையில் கே.ராஜன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்பதை யாரும் நம்பவில்லை. அவர் சினிமா துறையில் ரூ.20 கோடி வரை பைனான்ஸ் செய்துள்ளார். அதில் 90 சதவிகிதம் வரை திரும்ப வரவில்லை. எல்லாரும் நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டார்கள். கே.ராஜன் யாரிடமும் தலை குனிந்து செல்லமாட்டார். பழகுவதில் இனிமையானவர். கடன் கொடுத்தவர் வீட்டுக்கு செல்வது, போனில் தொடர்பு கொள்வது எல்லாம் செய்வார்.
இதை நெருங்கிய சினிமா துறை நண்பர்களிடம் சொல்லியுள்ளார். 1980ல் வந்தவர் 46 ஆண்டுகளாக போராடினார். சிறிய பட்ஜெட் படங்களுக்காக போராடியவர். அதற்காக உதவிய பணம் தான் திரும்ப வரவில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் இதய பிரச்னைக்காக பேஸ்மேக்கர் பொருத்தியுள்ளார்கள். இதனாலும் உடல்நல பிரச்னைகளை சந்தித்துள்ளார்.
கே.ராஜன் பணம் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க கஷ்டப்பட்டார் என்பது உண்மை. கே.ராஜனின் மூத்த மகன் ஆர்.ஜே.பாலாஜி நடித்த எல்.கே.ஜி படத்தின் இயக்குநர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான ஹோட்டலில் தான் வருடக்கணக்கில் தங்கி வந்தார். மகன்கள் அவ்வப்போது வந்து பார்ப்பார்கள். கே.ராஜனின் மகள் கணவர் 6 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து உயிரிழந்தார். இதனால் மகள் வாழ்க்கை குறித்த கவலையும் அவரை ஆழ்த்தியது. ஹோட்டலில் இருந்த அவருக்கு கார் ஓட்டுநர் மற்றும் ஒரு உதவியாளர் இருந்தார்கள்.
சினிமாத்துறையைப் பொறுத்தவரை ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணவில்லை என்றால் எதுவும் நடக்காது. கே.ராஜன் சினிமாவில் பல பதவிகளில் இருந்துள்ளார். அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. சினிமாவில் படம் எடுப்பது இனி ஆபத்து தான். 100 படங்களில் 85 படங்கள் நஷ்டம் ஏற்பட்டால் எப்படி சரியாக வரும். நடிகர் சம்பளத்தை குறைக்க வேண்டும். இயக்குநர்களிடம் திட்டமிடுதல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஓரளவு சினிமாவை நாம் காப்பாற்ற முடியும்” எனவும் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















