பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் உள்ள தனது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் சென்று பானிபூரி சாப்பிட்டதோடு, இது என்னுடைய நெகிழ்ச்சியான தருணம் என புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகியாகவும் வலம் வந்தவர். தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி நடித்த அவர், பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வந்த அவர் சுமார் 144 கோடி மதிப்பீட்டில், பிரம்மாண்டமான வீடு ஒன்றினையும் வாங்கியுள்ளனர். இதனையடுத்து நியூயார்க் நகரில் ப்ரியங்கா சோப்ரா பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றினை தொடங்கிய நிலையில் சோனா என்றும் ரெஸ்டாரண்ட்டிற்கு பெயரிடப்பட்டது. இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
ப்ரியங்கா சோப்ராவின் “ சோனா ரெஸ்டாரண்ட்“ சில மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது என்றாலும், அந்த நேரத்தில் ப்ரியங்கா லண்டனில் பட சூட்டிங்கில் இருந்தமையால் கலந்துகொள்ள முடியவில்லை. தன் உழைப்பில் ஆரம்பித்த ரெஸ்டாரண்ட் திறக்கும்பொழுது தான் இல்லாத வருத்தம் இருந்ததாகவும், எப்படி மக்களை கவரும் வகையில் ஹோட்டலாக அமைந்துள்ளது என தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
இந்நிலையில் தான் அந்த வருத்தத்தினைப்போக்கும் விதமாக அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ள தனது சொந்த ரெஸ்டாரண்ட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, “சோனா உணவகத்துக்கு ஒரு வழியாக வந்துவிட்டேன்“, என்று மகிழ்ச்சி பொங்க இன்ஸ்டாகிராமில் போட்டாக்களை பதிவிட்டுள்ளார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்ட தருணங்கள் உட்பட தனது ரெஸ்டாரன்டில் உள்ள அனைத்து இடங்களில் நின்று எடுத்த புகைப்படங்களையும் அழகாக பகிர்ந்திருந்தார். மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலான எங்களின் திட்டமிடுதலின் கிடைத்த பொக்கிஷம் தான் சோனா ரெஸ்டாரண்ட் எனவும் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
இதோடு இந்த ஹோட்டல் உருவாவதற்கும், மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையினை கொண்ட சமையல் கலைஞர்கள் அனைவரையும் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ப்ரியங்கா சோப்ரா என்ற பெயரில், தனிப்பட்ட டைனிங் அறை, அற்புதமான இன்டீரியருடன் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதோடு நிச்சயம் இது நியூயார்க் சிட்டியின் இதயங்களைக் கவரும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.