தமிழ் சினிமாவில் தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு அவருக்கு தென்னக சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பாலிவுட் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.


பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவரானார். அதன் பின்னர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிலேயே முகாமிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா , பிரபல நடிகரும் , பாப் இசை பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.பிரியங்கா சோப்ரா தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில், எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.






சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஆரம்பகால கசந்த திரை அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். அப்போது அவர்  பாலிவுட்டில் கதாநாயகிகளுக்கு கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது குறித்தும், ஆண்கள் படப்பிடிப்பு தளங்களில் சிறப்பு மரியாதை பெறுவதும் பெண்களுக்கு அவை அளிக்கப்படாமல் இருந்தது குறித்தும் சாட்டியுள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், பாலிவுட்டில் கதாநாயகர்களுக்கு இணையாக என்றுமே சம்பளம் எனக்கு கொடுக்கப்பட்டது இல்லை. எனது இணை கதாநாயகனின் 10 சதவீத சம்பளம் தான் எனக்கு கிடைத்தது. என் சம்பளத்திற்கும் அவர்களின் சம்பளத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது மிகப் பெரிதாக இருந்தது. பல பெண்கள் இன்றும் அந்த நிலையை சந்தித்து வருகின்றனர்.






நான் தற்போது பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்தால், நானும் இந்த நிலையைத் தான் சந்திக்க நேரிட்டிருக்கும். எனது சமகால கதாநாயகிகள் சம்பளம் குறித்து குரல் எழுப்பினோம். நாங்கள் கேட்டும் அது எங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளங்களில் தான் ஒரு சாதாரண நபராக பார்க்கப்பட்டதாகவும், கதாநாயகருக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மணிக்கணக்கில் படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகருக்காக காத்திருப்பேன். கதாநாயகர்கள் அவர்களது சௌகரியத்திற்கு வருவார்கள்; அப்போதுதான் படப்பிடிப்பு தொடங்கும். இவை அனைத்தையும் ஒரு சாதாரணமான விஷயமாக அப்போது நானே நினைத்துக் கொண்டிருந்தேன். 






ஆனால் இப்போது நான் ஹாலிவுட்டில் நடிக்க தொடங்கியவுடன், இந்த நிலை மாறியுள்ளது. சிட்டாடல் சீரிஸில் எனது இணை கதாநாயகனாக ரீச்சார்ட் மேடன் நடிக்கிறார்.  ரஷ்ஷோ ப்ரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'சிட்டாடல்' சீரிஸ் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த சயின்ஸ் பிக்சன் ட்ராமா சீரியஸை பேட்ரிக் மார்கன் இயக்குகிறார். அதில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.