வாடகை தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளனர் ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பைப் பகிர்ந்திருக்கும் பிரபல நடிகரும், தொழிலதிபருமான ப்ரியங்கா சோப்ரா, “ வாடகைத்தாய் மூலம் எங்களின் குழந்தையை வரவேற்றிருக்கிறோம். இந்த விஷயத்தை உங்களுடன் பகிரும் இந்த நேரத்தில், இவ்விஷயத்தில் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தையும், வெளியையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தும் நேரம் இது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தையை வரவேற்றுள்ளதைக் குறித்த அதே மகிழ்ச்சியை நிக் ஜோனஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
தகவல்களின்படி, தெற்கு கலிஃபோர்னியா மருத்துவமனையில் வாடகைத்தாய் வழியாக இன்று குழந்தை பிறந்துள்ளதாகவும், ப்ரியங்கா ஜோனஸ் தம்பதி தங்களின் பெண் குழந்தையை வரவேற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் 2018-ஆம் ஆண்டும் ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின்படியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு, பிரியங்கா சோப்ரா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை அகற்றியது விவாகரத்து வதந்திகள் பரவக் காரணமானது. அலுவல் ரீதியான வசதிக்காக மட்டுமே ப்ரியங்கா தனது ஒரே பெயரை பயன்படுத்த முடிவெடுத்ததாக ப்ரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.