Aadu Jeevitham Box office : தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி என அனைத்து மொழிகளிலும் வசூலை குவித்துள்ளது ஆடு ஜீவிதம் திரைப்படம்.


ஆடு ஜீவிதம்


மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம், படம் நேற்று மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் , இந்தி , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 


படத்தின் கதை


எப்படியாவது வெளிநாட்டுற்கு வேலைக்கு சென்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சின்ன ஆசையில், செழிப்பான தனது சொந்த ஊரையும், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி சைனியையும் விட்டு சவுதி அரேபியா செல்கிறார் நாயகன் நஜீப் முகமது (பிருத்விராஜ்) மற்றும் அவரது நண்பன் ஹக்கீம். செளதி சென்று சேர்ந்ததும் தன்னை அழைத்துச் செல்ல ஏஜெண்ட் யாரும் வராமல் தவிக்கிறார்கள். அப்போது ஏஜெண்ட் போல பாவனை செய்யும் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஆடுகள், ஒட்டகங்கள் மேய்க்கும் அடிமையாக பாலைவனத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தான் பேசுவதை புரியவைக்க முடியாமல், எதிரில் இருப்பவர் பேசும் மொழியும் புரியாமல் தவிக்கும் நஜீப், தான் அடிமையாக்கப்பட்டிருப்பதையே ஒரு சில  நாட்களுக்குப் பிறகுதான் உணர்கிறார்.


இந்த பாலைவனத்தில் இருந்து தப்பித்து, நஜீப் முகமது மீண்டு வந்த கதையை மிக உணர்ச்சிகரமான வகையில் சொல்லியிருக்கிறது ஆடு ஜீவிதம் படம்.


இப்படத்தை உருவாக்க 14 ஆண்டுகள் இயக்குநர் பிளெஸ்ஸி காத்திருந்திருக்கிறார். மேலும் இப்படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் தனது உடல் எடையை குறைத்து கடுமையான உழைப்பை செலுத்தியிருக்கிறார். படத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது பிருத்விராஜின் நடிப்பு. ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சிகரமாகவும், உடல்மொழியில்  நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


முதல் நாள் வசூல்






இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. வேலை நாளில் படம் வெளியாகியுள்ள போதும் படம் நல்ல வசூலை எடுத்திருக்கிறது. ஆடு ஜீவிதம் படம் முதல் நாளில் இந்தியளவில் ரூ 7.45 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று காட்சிகளைக் காட்டிலும் இரவு காட்சிக்கு ரசிகர்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக இந்த தளம் தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்து வர இருக்கும் இரண்டு விடுமுறை நாட்களில் இந்த வசூல் இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது