ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும்வாரணாசிதிரைப்படம் குறித்த புதிய தகவலை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் பகிர்ந்துள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக தானும் மகேஷ் பாபுவும் 90-க்கும் மேற்பட்ட டேக்குகளில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து பேசிய பிருத்விராஜ், “ஒரு காட்சியை படமாக்குவதற்காக 90-க்கும் மேற்பட்ட டேக்குகள் எடுக்கப்பட்டன. இது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை அல்ல. உண்மையிலேயே அந்த அளவுக்கு டேக்குகள் எடுக்கப்பட்டன. அந்த காட்சி குறித்து தற்போது எதையும் சொல்ல முடியாது. ஆனால் அந்த நாள் முழுவதும் நானும் மகேஷ் பாபுவும் அந்த காட்சியை பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு டேக்கிற்குப் பிறகும் காட்சியை ஆய்வு செய்த ராஜமெளலி, சிறிய மாற்றங்களை செய்து மீண்டும் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே பேட்டியில் ராஜமெளலியின் பணிமுறைகள் குறித்தும் பிருத்விராஜ் பேசியுள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநராக இருந்தாலும், தனது முதல் படத்தை இயக்கும் புதுமுக இயக்குநரைப் போலவே உற்சாகத்துடனும் கவனத்துடனும் அவர் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவாரணாசிதிரைப்படம், உலகின் பல்வேறு நாடுகளை மையமாகக் கொண்ட சாகசக் கதையாக உருவாகி வருகிறது. இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதை புராணக் குறிப்புகள், காலப்பயணம் மற்றும் உலகளாவிய சாகச அம்சங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜமெளலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருந்தன. படப்பிடிப்பு முடிந்த பிறகு விரிவான விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளும் நடைபெற உள்ளன.

வாரணாசிதிரைப்படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலிமற்றும்ஆர்ஆர்ஆர்படங்களின் வெற்றிக்குப் பிறகு ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படம் என்பதாலும், முதல் முறையாக மகேஷ் பாபு அவருடன் இணைந்திருப்பதாலும், இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்களும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. மகேஷ் பாபு மற்றும் ராஜமெளலிக்கு இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஒரு காட்சிக்காகவே 90-க்கும் மேற்பட்ட டேக்குகள் எடுக்கப்பட்டதாக பிருத்விராஜ் தெரிவித்திருப்பது, ‘வாரணாசிதிரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளது.