மலையாள சினிமா 2024-ஆம் ஆண்டு துவங்கிய நாள் முதல் ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை வழங்குவதில் தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரையில் மலையாள சினிமாதான் என்றுமே முதலிடம். அந்த வகையில் இந்த ஆண்டு இது வரையில் வெளியான பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம் போன்ற தரமான படைப்புகளின் வரிசையில் பிரீ ஸ்டைல் ரொமான்டிக் ஜானரில் முழு நீள என்டர்டெயின்மென்ட் படமாக வெளியானது தான் 'பிரேமலு' திரைப்படம். 



கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் செம்ம ரகளையான யூத் ஃபுல் திரைப்படம். ரொமான்டிக் காமெடி, வசீகரிக்கும் கதைக்களம் கொண்ட இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் அமோக  வரவேற்பை பெற்றது. கேரளாவில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான வெர்ஷனையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபீசில் வசூல் செய்து சாதனை படைத்தது. 


திரையரங்க ரிலீசுக்கு பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியான 'பிரேமலு' படத்திற்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 'பிரேமலு 2' படம் குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 






கண்டதும் காதலில் விழும் ஹீரோ, தன்னுடைய பொருளாதார நிலையால் தாழ்வுமனப்பான்மை, காதலுக்காக நண்பனை தொல்லை செய்தல் என வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதில் கவனத்தை ஈர்க்கும் வசனங்கள், புதுமையான உடல்மொழி என கவனத்தை ஈர்த்த ஹீரோ ஒருபக்கம் என்றால் படம் துவங்கியது முதல் துறுதுறுவென பேச்சு, சின்ன சின்ன சேட்டைகளுடன் அழகாக ரசிக்க வைத்தார் ஹீரோயின் மமிதா பைஜு.  



கிளைமாக்ஸ் காட்சியில் லண்டனுக்கு செல்ல விசா கிடைக்கவும், ஹீரோ ஹீரோயினை பிரிந்து செல்வது போல கதை முடிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 'பிரேமலு 2 ' திரைப்படம் 2025-ஆம் ஆண்டில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.