Vijayakanth: தன்னை விஜயகாந்த் ஒரு சன்னியாசி போல் பெண் பார்க்க வந்ததாக பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டனர். 

பெண் பார்க்க வந்த விஜயகாந்த்:



இந்த நிலையில் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோக்கள், அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் விஜயகாந்த் உடனான திருமண வாழ்க்கை குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”விஜயகாந்த் ஒரு பெரிய ஹீரோ, மாப்பிள்ளையாக வருகிறார் என்பதால் அவரை வரவேற்க பெரிய ஏற்பாடு செய்யப்பட்டது. முதன் முதலாக காலில் செருப்பு இல்லாமல், காவி வேட்டிக்கட்டி ருத்ராட்ச மாலையுடன் ஒரு சன்னியாசியாக தான் விஜயகாந்த் என்னை பார்க்க வந்தார். 

 

எளிமையாக விஜயகாந்த் நடந்து வந்ததை பார்த்த என் அம்மா, அவர் ஒரு ஹீரோவாக வருகிறார் என்பது தெரியவில்லை, என் கூட பிறந்த சகோதரர் வருவதாக கூறி அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தார். எங்கள் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க சென்ற போது ஒரு ஹீரோவுக்கு எப்படி பெண் கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். ஆனால், என் பெற்றோர் தீர்மானமாக முடிவெடுத்து விஜயகாந்திற்கு என்னை திருமணம் செய்து வைத்தனர்.

 

பல நாட்களுக்கு தூக்கமில்லை:


 

சினிமாவை போல் தான் பெண் பார்க்க வந்தபோது விஜயகாந்திற்கு காபி கொடுத்தேன். அதை வாங்கி குடித்த விஜயகாந்த் காபி சூப்பராக இருக்கு என மறைமுகமாக என்னை பிடித்திருப்பதை கூறினார். பெண் பார்த்த முதல் நாளே என்னை பிடித்து இருப்பதாக கூறிவிட்டார். கேப்டன் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே அவருடைய அம்மா இறந்து விட்டார். அதனால் தனது சகோதரர், சகோதரிகளுக்கு திருமணம் செய்து விட்டு தான் என்னை அவர் திருமணம் செய்தார். 

 

முதல்முறையாக விஜயகாந்தை பார்த்த பிறகு பல நாட்கள் தூங்காமல் இருந்தேன். என்னை விஜயகாந்த் தான் பெண் பார்க்க வருகிறார் என்று கூறியபோது முதலில் நான் நம்பவே இல்லை. ஹீரோ எப்படி என்னை பெண் பார்க்க வர முடியும் என சந்தேகப்பட்டேன். முதன்முதலில் விஜயகாந்திடம் தொலைபேசியில் தான் பேசினார். முதல் வார்த்தையாக நல்லா இருக்கிறீங்களா என்று தான் பேசினேன். அவருடன் முதலில் பேசும்போது பயத்தில் கை, கால்கள் நடுங்கியது. முதலின் என்னிடம் தமிழில் இருந்த பற்று பற்றி தான் விஜயகாந்த் பேசினார்” என்றார். 

 

முதல் கிஃப் என்ன?

 

தொடர்ந்து பேசிய அவர், “ விஜயகாந்திற்கு கிப்ட் கொடுக்க தெரியாது. திருமணமான ஒரே மாதத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. அப்போது கூட கூட இருந்தவர்கள் சொல்லி தான் எனக்கு கிப்ட் வாங்கி கொடுத்தார். 'V' போட்டு விஜயகாந்த் கொடுத்த டாலர் தான் எனக்கு அவர் கொடுத்த முதல் கிப்ட். திருமணமாகி வந்த பிறகு அவர் கழுத்தில் அணிந்திருந்த 786 போட்டு இருந்த டாலரை கழட்டி என் கழுத்தில் போட்டார். அது இரண்டுமே எனது வாழ்வில் கிடைத்த பொக்கிஷம். திருமணமான பிறகு ஊட்டிக்கு ஷீட்டிங் செல்லும்போது தான் என்னை ஹனிமூன் அழைத்து சென்றார். அப்போது கூப்பேவின் நடிகை அமலாவுடன் என்னை அழைத்து சென்றார். அது தான் எங்கள் ஹனிமூன்” என்றார்.

 

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ சமீப காலமாக விஜயகாந்துக்கு உடல்நல பாதிப்பு  ஏற்பட்டபோது ரொம்பவும் உடைந்து போனேன். ஒரு மனைவியாக  அவரை எப்படி எல்லாம்  பார்த்த நான் இப்படி ஒரு நிலைமை எங்கள் வாழ்க்கையில் வரும் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தோம்” என்றார்.