இயக்குநர் பிரவீன் காந்தி சர்ச்சை கருத்து


வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் போன்றவர்களின் வளர்ச்சிக்குப் பின் தான்  தமிழ் சினிமா தளர்ச்சிக் கண்டது என்கிற கருத்தைச் சொல்லி சென்ற வாரம் பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பிரவீன் காந்தி. இதனைத் தொடர்ந்து தற்போது நேர்காணல் ஒன்றில் மீண்டும் அதே போன்ற கருத்துக்களைப் பேசியுள்ளார் பிரவீன் காந்தி.


சாதியை வைத்து வியாபாரம்


தனியார் ஊடகத்தின் நேர்காணலில் பேசிய பிரவீன் காந்தி “தமிழ் சினிமா சாதியை மையப்படுத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சலிப்பு ஏற்பட்டுவிட்டது. கடந்த 5 மாதங்களாக தமிழ் சினிமாவில் நல்ல படம் எதுவுமே வரவில்லை. வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் படங்கள் தான் நல்ல படங்கள் என்று சொல்லாதீர்கள்.


மீடியா உட்பட எல்லாரும் இவர்களின் படங்கள் தான் நல்ல படங்கள் என்று ஆதரவு கொடுக்கிறீர்கள். இவர்கள் வந்த பிறகுதான் சினிமா மறுமலர்ச்சி அடைந்தது என்று சொல்லாதீர்கள். சினிமா பொழுதுபோக்காக இருந்தால் சினிமா பார்ப்பார்கள். Jurassic Park படம் எடுத்த ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் Schindlers List என்கிற படத்தை எடுத்தார். ஆனால் Jurassic Park தான் வெற்றிபெற்றது. அதனால் வெற்றிமாறன், பா. ரஞ்சித் வந்து தான் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டார்கள் என்று பேசாதீர்கள்” என்று பிரவீன் காந்தி கூறியுள்ளார்.


'வெற்றிமாறன் எல்லாம் எனக்கு குழந்தை'


தொடர்ந்து பேசிய அவர் “எனக்குத் தெரிந்து முதன்முதலில் சாதியை வைத்து வந்த படம் ‘வேதம் புதிது’. இயக்குநர் பாரதிராஜா ஒரு சில இடங்களை மட்டும் தொட்டுச் செல்வார். ஆனால் இவர்கள் யாரும் இன்னொரு சாதியினரை திட்டி படம் எடுக்கவில்லை. ரஞ்சித் எத்தனை மேடைகளில் என்னுடைய இனத்திற்காக நான் படம் எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். சாதியை ஒழிப்பதாக நினைத்து சாதிய வன்மத்தை நீங்கள் தூண்டி விடுகிறீர்கள்.


1980 மற்றும் 1990களில் சினிமாவில் எங்களுக்கு இடையில் எந்த விதமான பாகுபாடும் கிடையாது. வெற்றிமாறன் வந்தபிறகு தான் சினிமாவிற்குள் சாதி வந்தது. வெற்றிமாறன் சினிமாவில் வெற்றிக் கண்டதற்கு முன்பே நான் வெற்றியைக் கண்டவன். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி. குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை திருத்துவது என்னுடைய கடமை. இன்று சமூதாயத்தில் மாற்றம் வந்துவிட்டது. நீங்கள் எங்களை கொடுமைப்படுத்தினார்கள் என்று பழைய கதைகளை எடுத்துவந்து மீண்டும் சாதிய வன்மத்தைத் தூண்டாதீர்கள்” என்று பிரவீன் காந்தி பேசியுள்ளார். பிரவீன் காந்தியின் கருத்து வெற்றிமாறன் ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.