தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு , கன்னடம் , இந்தி உள்ளிட்ட பன்மொழி திரைப்படங்களில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராய் என்ற இயற்பெயர் கொண்ட இவரின் பெயரை இயக்குநர் பாலச்சந்தர்தான் பிரகாஷ் ராஜ் என மாற்றினாராம். தற்போது இந்தியாவிம் முக்கிய மொழி திரைப்படங்களில் வில்லன் மற்றும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதோடு ஒன்றி நடிப்பவர்களுள் ஒருவர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடல்நலம் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
அதில் “ மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்துக்கொண்டேன்...நான் மிகுந்த நலமுடன் இருக்கிறேன்..என்ன எனது குரல்வளைக்கு மட்டும் ஒரு வாரம் அமைதி தேவைப்படுகிறது..அதனால் மௌன விரதம் இருக்க வேண்டும்..அமைதியில் இருக்கப்போகிறேன் ..பேரானந்தம் “ என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிறிய vocal chords பிரச்சனையில் இருக்கும் பிரகாஷ் ராஜ் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது பெற்ற நடிகர் . அவற்றுள் ஒன்று சிறந்த தயாரிப்பாளருக்கான விருது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.கிட்டத்தட்ட 7 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.
இறுதியாக தமிழில் இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். படத்தில் தமிழ் தெரிந்தும் இந்தியில் பேசும் குற்றவாளி ஒருவரை கண்ணத்தில் அறைவது போன்ற காட்சிகளில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்ததால் , அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ் நான் படம் குறித்த புரிதல் வேண்டும் . படத்தில் பழங்குடியின மக்களின் அவதியை விட அறைதான் பெரிதாக தெரிகிறதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
சூர்யா ஜெய்பீம் படத்தை நடித்து தயாரித்ததற்கு குறிப்பிட்ட கட்சியிலிருந்து அழுத்தம் அதிகரித்த வண்ணம் உள்ள காரணத்தால் , ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் #westandwithsuriya என்ற முன்னெடுப்பில் இணைந்துள்ளனர். அதில் நடிகர் பிரகாஷ்ராஜும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.