டிசம்பர் மாதம் வெளியாக இருந்த பல்வேறு படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்த அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் , பாலய்யா நடித்துள்ள அகண்டா 2 ஆகிய படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தபடியாக கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருந்த பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரு படங்கள் வசூலை வார் குவித்தன. அடுத்தபடியாக வெளியாக இருக்கும் எல்.ஐ.கே படத்தின் மீதும் ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்துள்ளார்கள். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா , சீமான் , க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சைன்ஸ் ஃபிக்ஷன் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம் ?
டிசம்பர் 19 ஆம் தேதி ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் ஃபயர் & ஆஷ் திரைப்படம் உலகமெங்கிலும் வெளியாக இருக்கிறது. அவதார் பட வரிசைக்கு உலகளவில் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் எல்.ஐ.கே படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் படத்தின் ரிலீஸை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.