கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த படமாகவும் கோமாளி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 50 கோடி வசூலை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், இப்படத்தின் வசனங்கள் பெரிதளவில் கவனத்தை ஈர்த்தது.
டிராகன் பட வெற்றி
லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படத்தில் நடித்தார். இப்படம் பிரதீப் ரங்கநாதன் கரியரில் மிகப்பெரிய ஹிட் படமாகவும் 100 கோடி வசூல் செய்த படமாக அமைந்தது. இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபான்று இப்படத்தில் நடித்த கயாடு லோஹரும் சென்ஷேனல் ஹீரோயினாக மாறினார். இந்நிலையில், இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஹீரோவாகத்தான் நடிப்பேன்
டிராகன் படத்தின் 100வது நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கிய போது, அதில் கதாப்பாத்திரம் இருக்கிறது. அதில் நடிக்க கூப்பிட்டிருந்தார். அப்போது நான் அவரிடம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறினேன். பின்பு நான் இயக்கி நடித்திருந்த லவ் டுடே படத்தை அவருக்கு போட்டு காண்பித்தேன். அப்படத்தை பார்த்த பின்பு என்னை ஹீரோவாக வைத்து இயக்குவாயா என கேட்டேன். லவ் டுடே படம் வெளியாகி ஹிட் ஆனது. அதன் பிறகு இருவரும் இணைந்து டிராகன் படத்தில் பணியாற்றினோம் என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார்.
உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்
மேலும் பேசிய அவர், எனது இயக்கத்தில் நடித்து படம் ஹிட் ஆகிவிட்டது. இருந்தாலும் மற்றவருடை இயக்கத்தில் நடிக்க முடியுமா என பலரும் கேட்பார்கள். இப்போது டிராகன் படமும் ஹிட் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் ஆடியன்ஸ்க்குதான் நன்றி கூற வேண்டும். உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார். டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் டூட், எல்ஐகே போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதனோடு 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்திலும் லீட் ரோலில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.