பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக தமிழ் மற்றும் தெலுங்கில் தீவிரமாக ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார் பிஆர். அந்த வகையில் கோமாளி படத்தின் போது தயாரிப்பாளர் சார்பாக தனக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாகவும் ஆனால் அதை தான் திருப்பி கொடுத்துவிட்டதாக பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பரிசாக வந்த காரை திருப்பிக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்
ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படமே பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் முழு நீள படம். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்கியபோது பிரதீப்புக்கு வயது 24 மட்டுமே. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு தயாரிப்பாளர் சாபர்காக கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் திருப்பி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். " கோமாளிக்குப் பிறகு, எனக்கு ஒரு கார் பரிசாகக் கிடைத்தது, ஆனால் நான் அதைத் திருப்பிக் கொடுத்தேன். அப்போது அதற்கு பெட்ரோல் போட கூட என்னிடம் பணம் இல்லை. எனவே, அதற்குப் பதிலாக, அதற்குச் சமமான தொகையை ரொக்கமாகக் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டேன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தினேன். அதுதான் எனக்குத் தேவை. எனது ஆர்வத்தைத் தொடர விரும்புகிறேன். பணம் வேண்டுமென்றால், உடனடியாக அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்க முடியும், ஆனால் கிரியேட்டிவாக இருக்கும்போது கிடைக்கும் மன நிறைவே எனக்கு முதன்மையானது" என பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.