தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய ஸ்டாராக உருவாகியிருக்கிறார் இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே , டிராகன் என இரு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் டியூட் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை டியூட் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வசூலில் மாஸ் காட்டும் டியூட்
அறிமுக இயக்குநர் கீஸ்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் டியூட். மமிதா பைஜூ , சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ரொமான்ஸ் ஆக்ஷன் காமெடி என தீபாவளிக்கு குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் முழு கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ளது டியூட். தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது
அடுத்தடுத்த படங்களில் தனது மார்கெட்டை பெரிதாக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். முன்னதாக வெளியான டிராகன் திரைப்படம் முதல் நாள் முன்பதிவுகளில் ரூ 2 கோடி வசூலித்தது என்றால் டியூட் திரைப்படம் முன்பதிவுகளில் ரூ 3 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் முதல் நாளில் இப்படம் ரூ 18 லட்சம் வரை வசூலிக்கும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் டியூட் திரைப்படம் 6 முதல் 8 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் டுடே திரைப்படம் உலகளவில் ரூ 84 கோடி வசூலித்தது. டிராகன் திரைப்படம் ரூ 152 கோடிவரை வசூல் செய்தது. பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில் இந்த இரு படங்களின் வசூலை டியூட் படம் எளிதாக முறியடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இந்த தீபாவளியை முன்னிட்டு மாரி செல்வாரஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் , ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் மூன்று படங்களில் மக்கள் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .