லவ் டுடே , டிராகன் ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து நடிகராக ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான டியூட் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 5 நாட்களில் டியூட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது
டியூட் படத்தின் 5 நாள் வசூல்
குறும்படங்கள் மூலம் கவனமீர்த்த பிரதீப் ரங்கநாதன் ரவி மோகன் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு அதிக வசூல் வெற்றியை பதிவு செய்தார். இரண்டாவதாக தான் இயக்கிய லவ் டுடே படத்தில் தானே நாயகனாக நடித்தார். பிரதீப் ரங்கநாதனின் தோற்றத்தை பார்த்து இவரா நாயகன் என பலர் விமர்சித்தபோதிலும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே குறிப்பாக இளம் தலைமுறை ரசிகர்களிடையே கவனமீர்த்தார். தமிழ் மட்டுமில்லாமல் கேரளம் , ஆந்திராவிலும் இவருக்கு பெரியளவில் ரசிகரக்ள் உருவாகியுள்ளார்கள். இந்த ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படமும் கமர்சியல் வெற்றிபெற தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நடிகர் மற்றும் இயக்குநராக உருவாகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ நடித்துள்ள டியூட் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் வசூலில் முன்னிலையில் இருந்து வருகிறது. அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். முதல் நாளில் டியூட் படம் உலகளவில் 22 கோடி வசூலித்தது. தொடர்ந்து 2 ஆவது நாளில் ரூ 45 கோடி , 3ஆவது நாளில் 66கோடி , 4 ஆவது நாளில் 83 கோடி வசூலித்தது. 5 நாட்களில் டியூட் திரைப்படம் 95 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. முதல் வாரத்திலேயே படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ள நிலையில் தென் இந்தியாவின் முன்னணி நடிகர்களுக்கே சவால் விட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் , டுடே , டிராகன் தற்போது டியூட் என தொடர்ச்சியாக பிரதீப் ரங்கநாதனின் 3 படங்கள் 100 கோடி வசூல் ஈட்டி பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன