இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா. நடன ஜாம்பவானாக மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் பிரபுதேவா. இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் தமிழில் சக்கைப் போடு போட்டுள்ளது.
கமல் ஸ்ரீதேவி:
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத் திறன் கொண்ட பிரபுதேவா தற்போது பெரியளவில் படங்களில் கதாநாயகனாக நடிப்பதில்லை. 1990 முதல் 2010ம் ஆண்டு வரை நடிப்பிலும் பரபரப்பாக இருந்தவர் பின்னர் இயக்கம், நடனத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இருப்பினும் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார்.
இந்த சூழலில், பிரபுதேவா நடிப்பில் மீண்டும் ஒரு காதல் திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு கமல் ஸ்ரீதேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த 1997ம் ஆண்டு விஐபி என்ற படத்திலும், 1999ம் ஆண்டு டைம் என்ற படத்திலும் நடித்தனர். இந்த இரு படங்களின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
27 ஆண்டுகளுக்கு பிறகு:
சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை கிருஷ்ணாநந்த் கோட்டரபட்டு இயக்குகிறார். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் மிதுன், ஜெய்சங்கர், ஸ்மேகா ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜா ஆறுமுகம் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.
காதல் திரைப்படம்:
இந்த படம் ரோமியோ - ஜுலியட், லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, சலீம் - அனார்கலி ஆகியோரின் காதல் கதைகள் போல காவிய காதல் கதையாக இருக்கும் என்று படக்குழு தங்களது வீடியோவில் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு கமல் ஸ்ரீதேவி என்று பெயர் வைத்திருப்பதே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஏனென்றால், கமல் - ஸ்ரீதேவி இருவரும் தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற ஜோடிகளாக திரைப்படங்களில் உலா வந்தவர்கள். உச்சநட்சத்திரங்களான இவர்கள் இருவரும் இணைந்து 27 படங்கள் நடித்துள்ளனர்.
16 வயதினிலே, மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா என பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களும் ஆவார்கள். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
