பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் தலைப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ப்ராஜெக்ட் கே:


பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ப்ரஜெக்ட் கே திரைப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், முதல்முறயாக ஒரு இந்திய திரைப்படத்திற்கான அப்டேட் காமிகானில் வெளியாக உள்ளதாக படக்குழு அண்மையில் அறிவித்தது.


வெளியான டீசர்:


இந்நிலையில் சாண்டியாகோவில் நடைபெற்ற காமிகான் நிகழ்ச்சியில் ப்ராஜெக்ட் கே படக்குழு பங்கேற்றது. கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் போன்ற நட்சத்திரங்களும் இதில் அடங்குவர். தொடர்ந்து ப்ராஜெக்ட் கே படத்தின் டிசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு "கல்கி 2898 AD" எனவும் படக்குழு அறிவித்துள்ளது.



என்ன சொல்கிறது ”கல்கி 2898” டீசர்


கல்கி படத்தின் டீசர் ஹாலிவுட் தரத்தில் உள்ளது என்பது மிகையாகாது.  படத்தின் கதைக்களம் 2898ம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் பேரழிவு கண்ட உலகத்தை தீய சக்தி ஒன்று கையகப்படுத்தி ஆட்டுவித்து வருவதை போன்றும், அதை எதிர்த்து மக்களுக்கான சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க ஒரு பிரிவினர் போராடி வருவதை போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது, சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், பிரபாஸின் தோற்றம் மார்வெல் திரையுலகின் அயர்ன் - மேன் கதாபாத்திரம் போன்ற நினைவுகளை தருகிறது. டீசரின் தரம் என்பது நன்றாகவே உள்ளது. அதேநேரம், படத்தின் காட்சியமைப்புகள் ஸ்டார் வார்ஸ், டியூன் போன்ற பிரபலமான பல்வேறு ஹாலிவுட் படங்களின் சாயலை காண முடிகிறது.


இந்தியாவின் அயர்ன் மேன்?


பிரபாஸின் சூட் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில், டீசரில் அது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அயர்ன் மேன் சூட்டையே சற்று மேம்படுத்தியவாறு அது காட்சியளிக்கிறது. செயற்கை நுண்ண்அறிவு தொழில்நுட்பம் இப்படத்தில்  முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2898ம் ஆண்டு நடைபெறுவது போல உருவாகியுள்ள இப்படத்தில், பசுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதை டீசர் மூலமே உணர முடிகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.


பெரும் எதிர்பார்ப்பு:


ராஜமவுளி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும், நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவை கடந்து சர்வதேச அளவில் கவனம் பெற்றார் பிரபாஸ். இதனால், தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் உள்ளிட்ட எந்த படங்களுமே பெரிய தாக்கத்த ஏற்படுத்தவில்லை. இதனால் தொடர் தோல்விகளால் தவித்து வரும் பிரபாஸ், கல்கி 2898 AD படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.