நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியானது. இந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக அவர் ஆதிபுருஷ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ஆதிபுருஷ் உருவாகியுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு கிராபிக்ஸ் பணிகள் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதி திருப்பதியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற ஆதிபுருஷ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திபடுத்தவில்லை.
இந்நிகழ்வில் இயக்குநர் ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் வேண்டுகோள் விடுக்க அதுவும் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் ஆதிபுருஷ் படத்தின் முன்பதிவு கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 3 நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் கிட்டதட்ட 1.70 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 1.30 லட்சம் டிக்கெட்டுகள் இந்தி பதிப்பில் வெளியாகும் ஆதிபுருஷ் படத்துக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதிபுருஷ் படத்தின் கலெக்ஷன் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் மேலும் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.