கெளதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் தனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார் போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா.


போர் தொழில்:


சரத்குமார், அஷோக் செல்வன் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் போர் தொழில். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட படக்குழுவினர் படம் குறித்தத் தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள்.


போர் தொழில் படத்தை தனது முதல் படமாக எடுத்ததற்கு என்ன காரணம் என்று படத்தின் இயக்குநரிடம் கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்த விக்னேஷ் ராஜா “ க்ரைம் த்ரில்லரை முதல் படமாக எடுத்தால் வெற்றிபெறும் என்கிற எந்த எண்ணத்திலும் நான் இந்தப் படத்தை எடுக்கவில்லை. நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் கெளதம் வாசுதேவன் இயக்கிய வேட்டையாடு விளையாடு திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம். அப்போதிலிருந்தே எனக்கு க்ரைம் த்ரில்லரின் மேல் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. இந்தப் படத்தின் கதை எனக்கு தோன்றியதும் நான் எனது நண்பரான ஆல்ஃப்ரட் ஆகிய இருவரும் சேர்ந்து இந்தப் படத்திற்கான திரைக்கதையை விவாதித்து எழுதத் தொடங்கினோம். அப்படி உருவானது தான் இந்தப் படம்”


கௌதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி:


கெளதம் மேனன் குறித்து மேலும் ஒரு சுவாரஸ்யமானத் தகவலை தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார். தனது உடலை இன்னும் ஃபிட்டாக வைத்திருப்பது குறித்து கேட்கப்பட்ட போது.


அதற்கு பதிலளித்த சரத்குமார் “சின்ன வயதில் இருந்தே எனக்கு என் உடல் மீதான அக்கறை அதிகம். எனது அப்பாவும் என் உடல் மீது அதிக கவணம் செலுத்தி வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தேவையான உணவை எல்லாம் சமைத்துக் கொடுக்க சொல்லிவிட்டுச் செல்வார். நான் வாட்டசாட்டமாக இருந்ததை பார்த்து தான் எவ்வளவு அடித்தாலும் தாங்குவதற்கான ஆள் என்று என்னை கருதி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தார்கள்.


அப்போதெல்லாம் நான் எல்லா ஹீரோக்களிடம் அடி வாங்கிக் கொண்டிருப்பேன். அதற்குப் பிறகுதான்  நான் கதநாயகனாக மாறி மற்ற நடிகர்களை அடிக்கத் தொடங்கினேன். இப்போதுகூட கெளதம் மேனனுடன் ஒரு படத்தைக் குறித்து விவாதித்து வருகிறோம். ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். வெளியே பார்ப்பதற்கு சாதுவாகத் தோன்றும் ஒருவன் சந்தர்ப்பம் வந்தால் எவ்வளவு வன்முறையான ஒருவனாக மாறக்கூடும் என்பது இந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயம். இந்த மாதிரியான கதாபாத்திரத்திற்காக நான் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார் சரத்குமார். இந்தப் படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க இருக்கிறார் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.